வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் மெகா திட்டத்தை அடுத்த மாதம் முதல் செயல்படுத்துங்கள்!: மாநில அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்..!!

டெல்லி: வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அடுத்த மாதத்தில் இருந்து செயல்படுத்துமாறு மாநில அரசுகளை ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. அதிகப்படியான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை வெற்றிகரமாக 100 கோடியை தாண்டியுள்ளது. இதில், 2வது டோஸுக்கான கால அவகாசம் கடந்துவிட்ட போதிலும் சுமார் 20 கோடி பேர் 2ம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

எனவே அடுத்த மாதம் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் 2ம் டோஸ் செலுத்த தவறியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடுமாறு மாநில அரசுகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். இதேபோல, முதல் தவணை தடுப்பூசியையும் வீடு வீடாக சென்று போடுவார்கள் என்று அவர் கூறினார். அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் நேற்று காணொலியில் உரையாடிய அவர், வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் மெகா திட்டத்தை அடுத்த மாதம் முதல் செயல்படுத்த வலியுறுத்தினார்.

எந்த மாவட்டமும் விடுபடாத வகையில்  நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். 48 மாவட்டங்களில் தகுதி வாய்ந்த மக்களில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் சிறப்பு  கவனம் செலுத்தப்படும் என்றும் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

Related Stories:

More
>