‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது :விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட சூர்யா!!

மரக்காணம்: மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. கடந்த மாதம் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. தொடச்சியாக அடுத்த மாதம் 1 முதல் 8ம் வகுப்புகளும் நடத்தப்படவுள்ளது. மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்காததால், கற்றல் திறன் மற்றும் இடைவெளியும் ஏற்பட்டது. இந்த குறைபாட்டை போக்க தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கியது.

அந்த நிதியின் கீழ் முதல்கட்டமாக விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்படி மாலையில் ஒரு மணி நேரம் தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த பணியில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்த திட்டம் முதல்வர் ஸ்டாலினால் துவங்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பேசியுள்ள அவர்,  இனிது, இனிது கற்றல் இனிது. இந்த கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நம்ம மாணவர்களோட கற்றல் இடைவெளியை குறைக்க ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. நம்ம மாணவ, மாணவிகளுடைய கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாக விளையாட்டு முறையில் எழுதவும், படிக்கவும், கல்வி ஆர்வலர்கள் சொல்லி தரப்போகிறார்கள். உரிய பாதுகாப்பு வழிமுறையோடு இல்லம் தேடிக்கல்வி என்ற திட்டத்தில் அனைத்து குழந்தைகளும் பயன்பெற பெற்றோரும், ஊர்மக்களும் ஊக்கவிப்போம். உறுதி செய்வோம். நம்ம குழந்தைகளோட கல்வி மீது ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய நேரம் இது என்று அந்த விழிப்புணர்வு வீடியோவில் நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: