ஏா் இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துங்கள்!: அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு..!!

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏர் இந்தியா டாடா குரூப் கைவசம் உள்ளதால், மேலும் கடன் தொகையை நீட்டிக்க வேண்டாம் என அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடன் சுமையில் தவிக்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா குழுமம் ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. ஏர் இந்தியாவின் மொத்த கடனில் 15 ஆயிரத்து 300 கோடி கடனும் அந்த நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவீனங்கள் துறை எழுதியுள்ள கடிதத்தில், அரசு உயர் அதிகாரிகள், அலுவல் ரீதியாக ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கான கட்டண செலவை அரசே ஏற்று கொள்கிறது. அந்த கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து செலவீனங்கள் துறை பெற்றுக்கொள்கிறது. இந்நிலையில், ஏர் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் பங்கு விலகல் பணிகளை செலவீனத்துறை தொடங்கியுள்ளது.

விமான டிக்கெட்டுகளுக்கு கடன் அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே ஏா் இந்தியா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக அனைத்து துறைகளும் செலுத்திட வேண்டும் என்றும் இனி வரும் காலங்களில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரத்தை மற்ற அலுவலகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இதுவரை அரசு செலவில் பயணம் செய்து வந்த அந்த அதிகாரிகள் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் ரூ.18,000 கோடிக்கு ஏல விற்பனையில் வாங்கியுள்ளது. தற்போது விமான நிறுவனத்தை ஒப்படைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. நிறுவன பரிமாற்றம் செயல்முறை டிசம்பர் 2021க்குள் முழுமையாக முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது.

Related Stories:

More
>