×

அழகு என்பது கருப்பு!

நன்றி குங்குமம் தோழி

இயக்குநர் மதுமிதா

“பெண்கள், தங்களை ஆண்களுக்குச் சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கிறேன். ஆண்களுக்கு நிகரானவர் இல்லை, பெண்கள். மாறாக, ஆண்களை விட பன்மடங்கு உயர்ந்தவர்கள். ஒரு பெண்ணிடம், நீ எதையாவது கொடுத்தால், அவள் அதைப் பெரிதாக்கி, சிறப்புச் செய்து விடுவாள்!”
- வில்லியம் கோல்டிங்

ஆண்களுக்கு நிகராக பெண்கள் இன்று பல வேலைகள் செய்து வந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது சொற்பமே. அதிலும் கிரியேட்டிவ் துறையான திரைத்துறையில் எப்படிப்பட்ட திறமையாளர்களாக இருந்தாலும் அவர்கள் மேல் படுவது மங்கிய வெளிச்சமே. இந்த போட்டியான சூழலில் ஒரு சிலர் தங்களது ஒளியை வீசிக் கொண்டும்தான் இருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான “கேடி என்கிற கருப்பு துரை” திரைப்படம் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்ற இயக்குநர் மதுமிதா, அவரது வாழ்க்கை பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

“பிறந்தது தமிழ்நாடாக இருந்தாலும், அப்பா, அம்மாவின் வேலைக் காரணமாக இந்தோனேசியாவிற்குக் குடிபெயர்ந்தோம். அங்குதான் படித்து வளர்ந்ததெல்லாம். சென்னையில் இருந்த வரைக்கும் அப்பா சுந்தரராமன், டிராமா, தியேட்டர், கதை எழுதுவது, பத்திரிகை துறை என இயங்கிக் கொண்டிருந்தார். தூர்தர்ஷனில் நிறைய நாடகங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இதனால் கலை சம்பந்தமான ஆர்வம், அவருடன் சேர்ந்து எனக்கும் தானாகவே அமைந்தது.

இந்தோனேசியாவில், அங்கிருக்கும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து ‘தமிழ் மன்றம்’ ஒன்றை ஆரம்பித்தாங்க. இதில் தமிழ் எழுதிப் படிக்க இலவசமாக  சொல்லி கொடுத்தாங்க. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளோடு நிறையக் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடுவோம். அதில் நிறைய ஆளுமைகள் வேஷமிட்டு நடித்திருக்கிறேன். அம்மாக்கு என்னை டாக்டர் ஆக்க வேண்டுமென்பது ஆசை. ஆனால், நான் ஃபேஷன் டிசைன்தான் படிப்பேன் என்று சிங்கப்பூர் போனேன்.

அங்கு படித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு குறும்படம் இயக்கி இருந்தேன். அந்த படத்திற்கு பிபிசியில் பெஸ்ட் ஆஃப் வோர்ல்டு கேட்டகரியில், ‘அப்ஸ்ட்ராக் ஐடெண்டி’ என்ற விருது கிடைத்தது.  இது ஓர் உத்வேகமாக அமைந்ததால் இரண்டாம் ஆண்டிலிருந்து சினிமா படிக்க ஆரம்பித்தேன். அங்கு தியரியாக நிறைய கற்றுக் கொண்டேன். சிங்கப்பூர் அரசிடமிருந்து சிறந்த மாணவியாகப் பட்டம் பெற்று அடுத்து அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் அமைந்துள்ள ஹாலிவுட்டில் நியூயார்க் ஃபிலிம் அகெடமியில் இரண்டு ஆண்டு படித்தேன்.  அங்கு பெரும்பாலும் பிராக்டிக்கலாகத்தான் இருக்கும். இங்குதான் ஓர் இயக்குநர் என்பவர் ஒற்றை நபர் கிடையாது.

அவருடன் பணிபுரிபவர்களின் வேலைகளும் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்பதை உணர்ந்தேன். அங்கு படித்து முடித்த பின் ‘பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ திரைப்படத்தில் இண்டன்ஷிப்பாக இரண்டு மாதம் வேலை பார்த்தேன்” என்றார். “என்னதான் வெளிநாடுகளில் படித்திருந்தாலும், நமது கலாச்சாரத்தோடும், கே.பி சார், பாரதிராஜா சார், மணிரத்தினம் சார் படங்கள், இளையராஜா சார் இசையோடுதான் வளர்ந்தேன்” என்று கூறும் மதுமிதாவிற்கு படம் எடுக்க வேண்டுமென்கிற ஆசை வந்ததும் இவர்களது படங்கள் பார்த்துத்தான்.

தனது படிப்பை முடித்து 2007ஆம் ஆண்டு சென்னை வந்தவர் இயக்குநர் கௌதம் மேனனிடம், ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப்படத்தில் உதவியாளராக இருந்துள்ளார். தனது முதல் படமான  ‘வல்லமை தாராயோ’ விலிருந்து ‘பிக் பாஸ்’ இயக்கிய அனுபவங்கள் பற்றிப் பேசினார். “முதல் படத்திற்கான திரைக்கதையை எழுதிவிட்டு அப்பாவிடம் தான் கதை சொன்னேன். அப்பாவுக்கு கதை பிடிச்சு இருந்தது. அதனால் அவரையே, அந்த படத்தை தயாரிக்க சொன்னேன். காரணம்,  கமர்ஷியல் படம் எடுக்கும் போது அது சக்ஸஸ் ஆவதற்கான வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நான் எடுக்க நினைத்தது அது மாதிரியில்லை. அதனால் மற்றவருக்கு ரிஸ்க் கொடுப்பது நியாயம் இல்லை என்று தோன்றியது. முதல் இரண்டு படங்களுக்கும் அப்பாதான் தயாரிப்பாளர். வல்லமை தாராயோ மாநில விருது பெற்றது. அடுத்து ‘கொல கொலையா முந்திரிக்கா’, கிரேசி மோகன் சார் வசனம். அவரோடு வேலை பார்த்த அனுபவங்களை மறக்கவே முடியாது. எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் நமக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொடுப்பார். இந்த படம் வந்த போது சிங்கம் படமும் ரிலீஸ் ஆனதால் தியேட்டர் கிடைக்கவில்லை.

இந்த படங்களை அடுத்து ‘மூனே மூணு வார்த்தை’ கதையை நிதின் சத்யாவிடம் சொன்ன போது, ‘சரண் கதை கேட்கிறார், அவர்கிட்ட வேணா சொல்லுங்க’ என்று சொல்லி இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவானது. நல்ல விமர்சனம் வந்திருந்த போதும் படம் பெரிசா போகவில்லை. இதனையடுத்து கணவரோடு பாம்பே போய் கொஞ்ச நாள் இருந்தேன். அப்போதுதான் பிக் பாஸ் இயக்குவதற்கான வாய்ப்பு வந்தது. கமல் சாரை இயக்குவதற்கான வாய்ப்பு வரும் போது யார்தான் ஒத்துக்கொள்ளாமல் இருப்பாங்க. அவரிடம், எப்போதும் மக்கள் திரையில்தான் உங்களை பார்க்கிறார்கள். நாம் ஏன் பிகைண்ட்த சீன் கமல் சாரை பார்க்க வைக்கக் கூடாது என்ற ஒரு ஐடியா சொன்னேன்.

அவங்களும் யோசித்து ஓகே பண்ணாங்க, அது சக்ஸஸும் ஆனது. இதை முடித்து மீண்டும் பாம்பே போன சமயம் தான் சரிகமா தயாரிப்பு நிறுவனம் ஒரு படம் பண்றாங்க என்று நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டு அவங்களிடம், ‘தலை கூத்தல்’ என்கிற நாட் சொன்னேன்” என்று கூறும் மதுமிதா கேடி படம் உருவான கதையை பகிர்ந்தார். “படம் மதுரை, விருதுநகர் பகுதியில் நடக்கும் கதைக்களம். அதன் இயல்புத் தன்மை மாறாமல் இருக்க அதற்கான எழுத்தாளரைத் தேடினேன். பல தேடலுக்கு பிறகு, படத்தின் இசையமைப்பாளர் கார்த்திகேய மூர்த்தி மூலம் சபரி அறிமுகமானார். வசனங்களிலும் சின்னச் சின்ன டீடெயிலிங் செய்து அழகா வடிவமைத்துக் கொடுத்தார்.

பின் யாரை நடிக்க வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. வயதான தோற்றத்தில் தனுஷ் சாரை நடிக்க வைக்கத் திட்டமிட்டோம். விளம்பரம், வியாபாரம் நன்றாக அமைந்தாலும், திரையில் பார்க்கும் போது தனுஷ் சார் தெரிவாரே தவிர கருப்பு துரை தெரியமாட்டார். கருப்பு துரை கதாபாத்திரத்திற்கு நிறைய பேரை ஆடிஷன் செய்தோம். யாருமே செட்டாகல. அப்போதுதான் மு.ரா. சாரின் புகைப்படம் அனுப்பி வைத்தாங்க. அவரை நானே தொடர்பு கொண்டு கதைப் பற்றி பேசினேன். அவருக்கு பிடித்துப் போனது.

அடுத்து சின்ன பையன். கருப்பா அழகா இருக்கணும். நூறு பேருக்கு மேல் பார்த்ததில் எல்லாருமே சினிமா தனமாகத்தான் இருந்தாங்க, இயல்பாக இல்லை. இதற்கிடையில் லொக்கேஷன் பார்ப்பதற்காகக் குற்றாலம் போனோம் அங்கு தான் நாகவிஷால் என்ற பையனை தேர்வு செய்தோம். மு.ரா சாருக்கும் இந்தப் பையனுக்கும் எப்படி கெமிஸ்ட்ரி இருக்குன்னு பார்க்க ஒரு பத்து நாள் ஒர்க்‌ஷாப் நடத்தினோம். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி  இருந்தது. உடனே ஷூட்டிங்கை முழு மூச்சோடு ஆரம்பிச்சோம். நாங்க இருவர் மேல் வைத்திருந்த நம்பிக்கை திரையில் பிரதிபலித்த போது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது’’ என்று படக்குழுவினர் பற்றி பகிர்ந்து கொண்டார்.  

‘‘குற்றாலம், தென்காசி பகுதிகளில் 28 நாட்கள் ஷூட்டிங். படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருப்பதில் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரனின் பங்கு பெரிது. என்னுடைய குழு எனக்குத் துணையா இருந்தாங்க என்று சொல்வதை விட, அவங்க வீட்டு கல்யாணம் போல் முழு அர்ப்பணிப்போடு எதிர்பார்ப்பதை மீறி வேலை பார்த்தாங்க. இசையமைப்பாளர் கார்த்திகேய மூர்த்தி, வசனம் எழுதிய சபரி, எடிட்டர் என் கணவர் விஜய், அசோசியேட் இயக்குனர் பரத் சார், சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் என எல்லோரும் 200% ஒத்துழைப்பு கொடுத்ததால் படம் பேசும் பொருளாக மாறியிருக்கிறது” என்று கூறும் மதுமிதா தமிழ் திரையுலக சூழலில் இருக்கும் சவால்கள் பற்றி கூறினார்.

“சமீபத்தில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அவர்களிடம் பேசும் போது மற்ற படங்களின் போஸ்டரோடு கே.டி போஸ்டரும் இருக்கிறது இதில் எதைத் தேர்வு செய்வீங்க என்று கேட்டேன். அவர்கள் என்டர்டைமென்ட் இருக்கும் படத்திற்குப் போவோம் என்றனர். அவர்கள் பாஷையில்  எதை என்டர்டெயின்மென்ட் என்று கூறுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. காரணம் கே.டி படத்தில் ஹூமர், எமோஷ்னல், பாட்டு எல்லாமே இருக்கு. வெளிநாடுகளுக்குப் போய் விருதுகள் வென்றிருப்பதோடு இங்கு நேர்மறையான விமர்சனமும் பெற்றிருக்கிறது. துபாயில் படம் முடிந்ததும் எழுந்து ஐந்து நிமிடம் கைதட்டினாங்க. திரையரங்கிற்கு வரும் மக்கள் ரசிக்கிறாங்க.

சி.என்.என்-னில் இந்த படம் பற்றி நல்ல விமர்சனம் வந்துள்ளது என்ற சொன்ன போது, அதற்கு அவர்கள், “என்டர்டெயின்மென்ட்ன்னா டான்ஸ், பாட்டு, ஹீரோயிசம், கிளாமர் இருக்கணும்” என்றார்கள். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. திரைப்படம் பொறுத்தவரை மாஸ் ஹீரோ என்றால் அதன் பட்ஜெட் வேறு. அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படத்ைத சிறிய அளவு பட்ஜெட் படத்துடன் எவ்வாறு ஒப்பிட்டு பார்க்க முடியும். பெரிய படத்திற்கு ஐந்து போஸ்டர் வெளியானால், சிறிய படத்திற்கு ஒன்று தான் வெளியாகும். அதே போல் அதற்கான விளம்பரம் தொலைக்காட்சியில் நாள் முழுதும் வெளியாகும்.

சின்ன படத்திற்கு அந்த அளவுக்கு விளம்பரம் செய்ய முடியாது. எங்கு திரும்பினாலும் அந்த படத்தின் போஸ்டர் நம்மை அந்த படம் பார்க்க தூண்ட செய்யும். அதையும் மீறி சிறிய படம் வெற்றி பெறும் போது, அதற்கான மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது’’ என்று கூறும் மதுமிதா தான் எடுக்க நினைக்கும் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசினார். “நான் இருபத்திரண்டு வயதில் எடுத்த படத்திற்கும் தற்போது எடுத்திருக்கும் படத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

வாழ்க்கையில் பார்த்த அனுபவங்கள், நல்லது-கெட்டது, அச்சீவ்மென்ட்ஸ்… என எல்லாமே சேர்ந்து வரும் போது அந்த வளர்ச்சி கண்டிப்பாக இருக்கும். இதை மெச்சூரிட்டியாக  பார்க்கிறேன். என்னுடைய படங்களில் உள்ள கதை பார்வையாளர்களை நெருக்கமாகவும், அந்த கதையோடும் ஒன்ற வைப்பதே எனக்கான வெற்றியாகப் பார்க்கிறேன். மனித உறவுகளிடையே இருக்கும் ரிலேஷன்ஷிப், எமோஷ்னல் எல்லாம் யுனிவர்சலான விஷயம். அதனோடு தொடர்புடைய படைப்புகளாகத்தான் என் படம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றார் இளம் இயக்குநரான மதுமிதா.

தொகுப்பு: அன்னம் அரசு

Tags :
× RELATED கன்னியாகுமரியில் 8 மாதத்துக்கு பிறகு...