நகைக்கடைகளில் போலி நகை கொடுத்து மோசடி: கையும் களவுமாக பெண் சிக்கினார்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் கக்கன் நகர் பிரதான சாலையில் தங்கம், வெள்ளி நகைக்கடை நடத்தி வருபவர் தகலான் சவுத்ரி. கடந்த 19ம் தேதி இவரது கடைக்கு வந்த 30 வயதுடைய பெண் பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகளை வாங்க வந்திருப்பதாக கூறினார். கடை உரிமையாளர் சோதனை செய்ததில் ஒரிஜினலாக இருந்தது. அந்த பெண் உடனே பழைய நகைக்கு பதிலாக 7 சவரன் புதிய தங்க நகைகளை வாங்கிச் சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கடைக்காரர் அந்த பெண் கொடுத்த நகைகளை மீண்டும் உரசி பார்த்தார்.

அப்போது, அது போலி என்று தெரியவந்தது. உடனே வெளியே சென்று பார்த்தபோது அந்த பெண் மாயமாகிவிட்டார். புகாரின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் நகைக்கடையில் உள்ள சிசிடிவியில் பதிவை வைத்து மோசடி பெண்ணை தேடினர். மேலும், அந்த வீடியோவை போலீசார் வாட்ஸ்அப்பில் பகிர்ந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இதேபோல் உள்ளகரம், மேடவாக்கம் சாலையில் நகைக்கடையில் அதே பெண் பழைய நகைகளை கொடுத்து புது நகைகளை வாங்க முற்பட்டுள்ளார்.

அப்போது ஏற்கனவே வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் சிசிடிவி பதிவுகளை பார்த்திருந்த கடை உரிமையாளர் ரகசியமான ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து, அங்கு வந்த போலீசார் பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர்.விசாரணையில், சேலம் கொண்டராம்பட்டியை சேர்ந்த ராதா(30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து வேறு இடங்களில் மோசடி செய்துள்ளாரா என விசாரிக்கின்றனர்.

Related Stories: