விசிக பிரமுகர் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட 7 பேர் கைது

சென்னை: சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(50). 107வது வட்ட விசிக செயலாளர். கடந்த 25ம் தேதி இரவு நண்பர் ஜெயவேலுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 பைக்கில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இளங்கோவன் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில், சேத்துப்பட்டு 21வது தெருவை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (51), ஜெகநாதபுரம் 4வது தெருவை சேர்ந்த வெல்டிங் கடை நடத்தி வரும் குமரவேல் (39) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, சேத்துப்பட்டு பகுதியில் சாலையோரம் கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இளங்கோவன் ஒரு தரப்புக்கும், கொலை செய்த சஞ்சய் பிரிவு மற்றும் எழும்பூர் பகுதி அதிமுக பகுதி செயலாளர் ஆகாஷ் ஒரு தரப்பிற்கும் பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது இளங்கோவன், `எங்களை மீறி இந்த ஏரியாவில் கடை வைக்க முடியாது’ என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் பிரபு மற்றும் அதிமுக எழும்பூர் பகுதி செயலாளர் ஆகாஷ் ஆகியோர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இளங்கோவனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. மேலும், கொலை குற்றவாளிகள் திருவள்ளூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

உடனே நேற்று முன்தினம் இரவோடு இரவாக தனிப்படை போலீசார் திருவள்ளூர் சென்று சேத்துப்பட்டு எம்.எஸ்.நகரை சேர்ந்த சஞ்சய் பாபு (38), இவர் அரசியல் கட்சி ஒன்றில் நிர்வாகியாக இருக்கிறார். தமிழா (எ) தமிழ்ச்செல்வன்(36), சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்த புஜ்ஜி (எ) ராகேஷ் (32), மாதவரம் கனகசத்திரம் பகுதியை ேசர்ந்த மூர்த்தி (32), மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த விஜய் (எ) லொட்ட விஜய் (35), சேத்துப்பட்டு எம்.எஸ்.நகரை சேர்ந்த டேனியல் ராஜ்(23), சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஆகாஷ்(23) ஆகிய 7 பேரை கைது செய்து 7 அரிவாள், 3 பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>