கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி; ரசாயனத்தில் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் வாழைத்தார்கள் அழிப்பு: வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

சென்னை: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல்லில் பழுக்க வைத்த வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் பழ மார்க்கெட்டில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கார்பைடு கல் மற்றும் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்டிருந்த 15 டன் வாழைத்தார்களை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வழைத்தார்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மார்க்கெட் பின்புறம் உள்ள இடத்துக்கு கொண்டு சென்று எத்திலின் ரசாயனத்தால் அழித்தனர். மேலும், வாழைத்தாரை தொடர்ந்து வேறு பழங்கள் கார்பைடு கல்லில் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: கார்பைடு கல் மற்றும் ரசாயனம் தெளித்து செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிட்டால் உடல்பாதிப்பு, வயிற்று போக்கு, அஜீரண கோளாறுகள் ஏற்படுவதுடன் புற்றுநோய் தாக்கவும் வாய்ப்புள்ளது. எனவே கார்பைடு கல்லில் பழங்களை பழுக்க வைக்கும் செயலில் வியாபாரிகள் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்யமுடியாத நிலைமை ஏற்படும், என எச்சரித்தனர்.

Related Stories: