நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது

சென்னை: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு தமிழக ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதைதொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை சுற்றிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் அறிவித்தபடி இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன், அகில இந்திய செயலாளர் மயூக் பிஸ்வாஷ் ஆகியோர் தலைமையில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் சின்னமலையில் உள்ள ராஜிவ் காந்தி சிலை அருகே நேற்று காலை ஒன்று கூடினர். அப்போது மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். பிறகு கவர்னர் மாளிகையை முற்றுகையிட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் பேரணியாக புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் பேரணியாக சிறிது தொலைவு ெசன்றனர்.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அனைவரையும் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் சிறிது நேரம் சின்னமலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன், அகில இந்திய செயலாளர் மயூக்பிஸ்வாஷ் உட்பட 400க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும் அருகில் உள்ள சமுதாய நல கூட்டத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் சிறிது நேரம் கவர்னர் மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: