ஓபிஎஸ்சை ஓரம்கட்ட நினைத்தால் பிரச்னை வெடிக்கும்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொளத்தூரில் கூடிய அதிமுகவினர்

சென்னை: சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து  ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரும், அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை அவரது இல்லத்தில் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்களுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் பேசி முடிவு எடுப்பார்கள் என ஓபிஎஸ் பேசியதில் எந்தத் தவறும் இல்லை.

இதற்காக சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சிப்பவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே இரண்டு முறை இதேபோல் ஓபிஎஸ் பேசியிருக்கிறார். எனவே இதில் எந்த தவறும் இல்லை. ஓபிஎஸ்சை விமர்சித்த கட்சி நிர்வாகிகள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். தற்போது தேவையில்லாமல் ஓபிஎஸ்சை விமர்சிப்பதால் கட்சி பலவீனப்பட்டு தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாக அமையும். எனவே இரண்டாம் கட்ட தலைவர்கள் தேவையில்லாமல் பேசி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஓபிஎஸ்சை ஓரங்கட்ட நினைத்தால் அது தோல்வியில்தான் முடியும்.

ஓபிஎஸ்சை விமர்சித்தவர்களை எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் கண்டித்து இருக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக அவரிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளிவராததால் தான் நாங்கள் இங்கு கூடியுள்ளோம். ஓபிஎஸ்சுக்கு எதிராக பேசியவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும். அடுத்த இரண்டு நாட்களில் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக தொண்டர்கள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம், என தெரிவித்தார்.

தொடர்ந்து ஓபிஎஸ்சுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அதிமுகவினர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கொளத்தூரில் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிராகவும், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவும் பேட்டி அளித்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: