நீதிபதிகள் நியமனத்தை விமர்சித்த விவகாரம் குருமூர்த்திக்கு எதிரான மனு மீது விசாரணை: தமிழக அட்வகேட் ஜெனரல் தகவல்

சென்னை: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான அனுமதி கோரிய மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி பேசும்போது, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் வாதிகளால் நியமிக்கபட்டவர்கள்.

யார் மூலமாவது, யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர். இது வருத்தபட வேண்டிய விஷயம். ஊழல் செய்பவர்களை நீதிமன்றங்கள் தண்டிப்பது இல்லை. எனவே, தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இதுபோன்று நடைபெறாது என்று பேசியிருந்தார். இதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அப்போதைய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடம் மனு அளித்தார். அதில் துக்ளக் பத்திரிக்கையின் 51வது ஆண்டு விழாவில் நீதித்துறையும் நீதிபதிகளையும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 ஆனால் அந்த மனுவை அப்போதைய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நிராகரித்துவிட்டார். இந்த நிலையில்,எனது மனுவை நிராகரித்து அட்வகேட் ஜெனரல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தங்கள் தரப்பிடம் உரிய விசாரணை நடத்தப்படாமல் அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், இதற்கு முன்பு இருந்த அட்வகேட் ஜெனரல் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாகவும், வழக்கறிஞர் எஸ்.துரைசாமியின் மனு மீது மீண்டும் நவம்பர் 11ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை  வழக்கறிஞர் எஸ். துரைசாமி சார்பில் ஆஜராகும் வக்கீல் வி.இளங்கோவனுக்கு அட்வகேட் ஜெனரல் அனுப்பியுள்ளார்.

Related Stories:

More
>