பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிக்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ254 கோடி ஒதுக்கீடு

சென்னை: பழங்குடியினர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இந்த ஆண்டு ரூ130 கோடியும், அடுத்த ஆண்டுக்கு ரூ124 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரூ394 கோடியே 69 லட்சத்து 17 ஆயிரம் செலவில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள் மற்றும் சூரிய மின் விளக்குகள் போன்றவைகளை மாநில நிதியில் இருந்து மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதில் முதல்கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் 2020-21ம் நிதியாண்டில் ரூ129 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். 2வது கட்டமாக 2021-22ம் நிதியாண்டில் ரூ123 கோடியே 85 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

நிதி ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளதால் சாலை, குடிநீர் வசதி, தெரு விளக்குகள் மற்றும் சூரிய மின் விளக்குகள் போன்றவைகளை மாநில நிதியில் இருந்து மூன்று ஆண்டுகளில் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பணிகளை முன்னுரிமை அடிப்படையில் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தபுள்ளி நடைமுறைகளை பின்பற்றி அமைக்க வேண்டும்.

இந்த பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாகவும், பேரூராட்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை பேரூராட்சி துறை மூலமாகவும், வனத்துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை முதன்மை தலைமை வன பாதுகாவலர் மூலமாகவும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அரசு அனுமதி அளித்துள்ள தொகைக்கான செலவினத்தை பயன்படுத்தியதற்கான சான்றிழை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அரசுக்கு பழங்குடியின நல இயக்குனர் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: