தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு செலவிட ரூ77 கோடி மானியம்

சென்னை:  ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு, 2021-2022ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கு, 31 லட்சத்து 214  மாணவர்களுக்கு செலவிட ரூ 77 கோடியே 90 லட்சம் மானியம்  வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் தொடர் செலவினத்துக்காக நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்த நிதி மானியமாக அனைத்து பள்ளிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு செலவிடப்படும். அதன்படி இந்த 2021-2022ம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு செலவிட பள்ளி மானியமாக ரூ 77 கோடியே 90 லட்சம் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி

* 1 முதல் 30 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ10 ஆயிரம்  வீதம் 11973 பேருக்கு ரூ1197 லட்சம்,

* 3 முதல் 100 மாணவர்கள் சேர்க்கை உள்ள பள்ளிக்கு மாணவர் ஒருவருக்கு தலா ரூ25ஆயிரம் வீதம் 12ஆயிரத்து 796 பேருக்கு ரூ 3199 லட்சம்,

* 101 முதல் 250 பேர் உள்ள பள்ளிக்கு மாணவர் ஒருவருக்கு தலா ரூ50 ஆயிரம் வீதம் 5765 பேருக்கு ரூ2882 லட்சம்,

* 251 முதல் 1000 பேர் உள்ள பள்ளிக்கு மாணவர் ஒருவருக்கு தலா ரூ75 ஆயிரம் வீதம் 674 பேருக்கு ரூ 505 லட்சம்,

* 1000 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் 6 பேருக்கு ரூ6 லட்சம்என மொத்தம் 7 ஆயிரத்து 790 லட்சம் (ரூ77 கோடியே 90 லட்சம்) நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

 தற்போது நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி அனுமதிக்கப்பட்டுள்ள தொகையில் 50 சதவீதம் முதல் தவணையாக, பள்ளிகளில் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு பள்ளிக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மானியத் தொகை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முடிவு செய்துள்ளது. இந்த தொகை அந்தந்த பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

மேற்கண்ட பள்ளி மேலாண்மை தொகையை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: பள்ளிகளில் வகுப்பறைகள், கழிவறைகள் போன்றவற்றை தூயமை செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10 சதவீதத் தொகையை முழு சுகாதார செயல்திட்ட இனங்களுக்கு செலவிட வேண்டும். மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நடத்தை மாற்ற செயல்பாடுகள், திறன் மேம்பாட்டுக்கு செலவிட வேண்டும்.

பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள உபகரணங்களை மாற்றவும், பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான மின் கட்டணம், இணையம், ஆய்வக உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் போன்றவற்றுக்கு இந்த நிதியை செலவிட வேண்டும். அரசுப் பள்ளிகளில் சுற்றுச் சுவர், வகுப்பறை, கழிவறை, பராமரிக்கப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்படும் அனைத்து பொருட்களும் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கொள்முதல் விதிகளை மீறி செயல்படக் கூடாது.

Related Stories:

More
>