தீபாவளி விற்பனை இலக்கு ரூ200 கோடி கோ-ஆப்டெக்ஸில் 30% தள்ளுபடி

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் தீபாவளியையொட்டி 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனை ரூ200 கோடியை எய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் தொமுச பேரவையின் பொதுச்செயலாளர் எம்.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கைத்தறி ஆடைகளை தோளில் சுமந்து விற்பனை செய்தது வரலாறு. அவர்கள் வழி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் தமிழக அரசு கைத்தறி மானிய கோரிக்கையின்போது கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10 சதவீத உயர்வும், அகவிலைப்படியில் 10 சதவீத உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து சிறப்புகாலமுறை ஊதியம் பெறும் தற்காலிக பணியாளர்கள் 406 பணியாளர்கள்  பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரிந்து வரும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதம் மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லந்தோறும் கோ-ஆப்டெக்ஸ் திட்டம், புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆரோக்கிய நல்வாழ்வு மற்றும் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் மற்றும் தொமுச பேரவைக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு கைச்செலவு தொகை வாரநாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ150ம், விடுமுறை நாட்களில் ரூ500 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதி இல்லாத விற்பனை நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூ300 வழங்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சமீபத்தில் 30 சதவீதம் தள்ளுபடி அறிவிப்பிற்கு பின்பு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த ஆண்டிற்கான தீபாவளி விற்பனை இலக்கு ரூ200 கோடியை எய்திட கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள், ஊழியர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.  தீபாவளிக்காக 30 சதவீத மற்றும் வட்டி இல்லாத கடன் வசதியை பயன்படுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: