தீபாவளியை முன்னிட்டு ஆவினில் ரூ26.72 கோடிக்கு இனிப்பு விற்று சாதனை

* விற்பனை அதிகரிக்க புதிய வகை இனிப்பு அறிமுகம்

* ஆவின் அதிகாரிகள் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 26 நாட்களில் ஆவின் இனிப்புகள் ரூ26.72 கோடிக்கு மேல் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் விற்பனையை அதிகரிக்க புதிய வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆவின் நிறுவனத்தில் தினமும் சராசரியாக 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. உள்ளூர் விற்பனை போக, 27 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலாக விற்கப்படுகிறது. மீதமுள்ள பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாகு, ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்களாக தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் விற்கப்படுகிறது.

அதேபோன்று ஆவின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்காக சிறப்பு இனிப்பு வகைகளை செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த ஆண்டும் தீபாவளிக்கு கடந்த 11ம் தேதி முதல் புதிய இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி காஜுகத்லி கால் கிலோ ரூ225ம், தட்டி மில்க் கேக் கால் கிலோ ரூ210ம், மோத்தி பாக் கால் கிலோ ரூ170, காஜு பிஸ்தா ரோல் கால் கிலோ ரூ275, காபி பிளேவர்டு மில்க் பர்பி கால் கிலோ ரூ210 எனவும், மேற்கண்ட ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு அரை கிலோ ரூ425 என விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் சுகாதாரமான முறையில், ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யில் தயாரிக்கப்படுகிறது.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய, தங்கள் துறை சார்ந்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும் போது ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டும். மேலும், தங்கள் துறை சார்ந்த அலுவலக கூட்டங்களில் இனிப்பு வழங்கும்போது, ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஸ்பெஷல் ஸ்வீட் ரூ1,06,33,442க்கும், சாதாரண இனிப்பு வகைகள் ரூ2,75,16,495க்கும், நெய் ரூ13,22,10,677க்கும், பாதாம் மிக்ஸ் பவுடர் ரூ40,27,604க்கும்,

சிறப்பு விற்பனை ரூ9,29,09,182க்கும் என மொத்தம் ரூ26,72,97,400க்கு விற்பனையாகியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ரூ19.98 கோடிக்கு விற்பனை ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வருகிற நவ.2ம் தேதி வரை 3 கோடியே 91 லட்சத்து 39 ஆயிரத்து 400 ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சராசரியாக 30 கோடியே 64 லட்சத்து 36 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: