போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்; நீதிபதி தலைமையில் விசாரணை குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

* ஒன்றிய அரசுக்கு கண்டனம்

புதுடெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் போதிய அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல் பிடிவாதமாக இருந்த ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் தகவல் வெளியிட்டன.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால், கடந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுமையாக முடங்கிது. ஆனால் ஒட்டுகேட்பு விவகாரத்தை ஒன்றிய அரசு மறுத்தது.  இதுதொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 13க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் வெறும் 2 பக்கத்தில் தெளிவான விளக்கம் இன்றி ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதை ஏற்காத உச்ச நீதிமன்றம் விரிவான பதிலுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதற்கு முதலில் அவகாசம் கோரிய ஒன்றிய அரசு பிறகு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘‘தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதில் இதில் கண்டிப்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. இது நீதிமன்றத்தில் பொதுவாக விவாதிக்கூடிய விஷயம் கிடையாது. அப்படி செய்தால், அது ஆபத்தான ஒன்றாக அமைந்துவிடும். அரசு எந்தவிதமான சட்டவிரோத கண்கானிப்பிலும் ஈடுபடவில்லை’’ என வாதாடினார்.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ‘‘பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் அனைத்து தரப்பு மனுதாரர்களின் வாதங்களையும் நீதிமன்றம் கேட்டு தற்போது பதிவு செய்துள்ளது.

அவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தன்னிட்சையாக உத்தரவை பிறப்பிக்கும். விசாரணை குழு அமைப்பது தொடர்பாக ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 13ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஹேமா ஹோலி ஆகியோர் அமர்வு பெகாசஸ் விவகாரத்தில் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பெகாசஸ் விவகாரத்தில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மிக முக்கியமான ஒன்றாகும். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனாகிய நாம் அனைவரும் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதனால் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தனிமனித உரிமைகளும் முக்கியமானது. இதில் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல, அனைத்து குடிமக்களின் தனிநபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தேவையான அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை. ஒருவேளை அவ்வாறு செய்திருந்தால் நீதிமன்றத்தின் சுமை கண்டிப்பாக குறைந்து இருக்கும். இதில் தேசத்தின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கூறுவதால் அனைத்து விவகாரத்திலும் அரசு ஒதுங்கி இருந்து விட முடியாது. பெகாசஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு தங்களுக்கான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அதனை செய்ய அரசு தவறிவிட்டது. இது மிகவும் கவலையான ஒன்று. இதுபோன்று செய்வதால் நீதிமன்றத்தை வாய்மூடிய பார்வையாளராக யாரும் மாற்றி விட முடியாது. இதில் மனுதாரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நீதிமன்றம் ஏற்றுகொள்கிறது. அதில் எந்தவித மறுப்பும் கிடையாது. அதேப்போன்று இந்தியர்களை பெகாசஸ் மூலம் கண்கானிப்பதை வெளிநாட்டு ஏஜென்சிகள் தலையிடுவது கவலையாக உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறது. இது பொய்யை விசாரிக்கவும், உன்மையை கண்டறியவும் நிச்சயமாக உதவிடும். இதில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி ரவீந்தரன் தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.

இதில் சர்வதேச தொழிநுட்ப அமைப்பை சார்ந்த் சந்தீப் ஒபிரய் குழுவின் துணைக் தலைவராகவும், மேலும் ரா அமைப்பின் முன்னாள் தலைவரான ஐபிஎஸ் அதிகாரி அலோக் ஜோஷி உறுப்பினராகவும் செயல்படுவார்கள். இதைத்தவிர மேற்கண்ட சிறப்பு நிபுணர் குழுவுக்கு உதவும் வகையில் ஒரு தொழில்நுட்ப குழுவும் அமைக்கப்படுகிறது. அதில், குஜராத்தை சேர்ந்த தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவின் அமிர்தா விஸ்வ தீபம் வித்யா பீடத்தின் பேராசிரியர் பிரபாகரன், மகாராஷ்டிரா மாநில இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் குழுவில் இடம்பெறுவார்கள்.

இந்த குழுவானது அடுத்த 8 வாரத்தில் பெகாசஸ் தொடர்பாக அனைத்து விவகாரங்களையும் விசாரித்து அதுகுறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை எட்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

காங். குற்றச்சாட்டை நியாயப்படுத்தி உள்ளது

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறுகையில், `பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில், தற்போது நிபுணர் குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பது, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தி உள்ளது. இவர்களை உளவு பார்க்க உத்தரவிட்டது யார்? என்பன உள்ளிட்ட 3 கேள்விகளை காங்கிரஸ் எழுப்பியது,’ என்று கூறினார்.

சட்ட நிபுணர்கள் வரவேற்பு

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில், `தேச பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களை உளவு பார்க்கும் அரசுக்கு இதுவொரு எச்சரிக்கை. தனி மனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மனுதாரர்களுக்கு கிடைத்த வெற்றி,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: