புதுகையில் விதிமீறல் புகார் எதிரொலி மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட முக்கிய அரசியல்வாதிகள் கல்குவாரி ைவத்துள்ளனர். இதில் பெரும்பாலான குவாரிகள் செயல்படாமல் உள்ளது. தற்போது 30க்கும் மேற்பட்ட குவாரிகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கைவாசல் கல்குவாரியும் அடங்கும். இந்த குவாரிகளிலிருந்து கட்டுமான பணிகளுக்கு அரை மற்றும் முக்கால் ஜல்லிகள், அரளை கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான ஆழத்தில் குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு புகார் சென்றது. ஆய்வு செய்ய தலா 4 பேர் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் புதுக்கோட்டை வந்த இந்த குழுவினர், விஜயபாஸ்கரின் குவாரி உள்பட 16 குவாரிகளில் அதிரடி ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அரசு விதிமுறைக்கு மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள் வெட்டப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த குவாரிகளில் விதி மீறல் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சுரங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>