பட்டாசு கடையில் தீப்பற்றி 7 பேர் சாவு உடல் சிதறி பலியான சிறுவன் சடலம் மீட்பு

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில உயிரிழந்த சிறுவனின் உடல் துண்டு, துண்டாக நேற்று மாலை மீட்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மும்முனை சந்திப்பு அருகே உள்ள பட்டாசு கடையில் நேற்றுமுன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து கடை முழுவதும் எரிந்தது. மேலும் அருகிலிருந்த பேக்கரி மற்றும் துணிக்கடைகளுக்கும் தீ பரவியது. அப்போது பேக்கரி கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இத்தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதியின் தம்பி முருகன் மகன் தனபால் (11) உடல் மட்டும் நேற்று முன்தினம் கிடைக்கவில்லை. இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2வது நாளாக பொக்லைன் இயந்திரம் மூலம் உடலை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை சிறுவனின் உடல் துண்டு துண்டாக மீட்கப்பட்டது. இதனை கண்டு உறவினர்கள் கதறியழுதனர்.

Related Stories:

More
>