வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு எடப்பாடி நண்பர் இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டம்: ரூ.5.5 லட்சம் வெளிநாட்டு பணம் கோர்ட்டில் ஒப்படைப்பு

சேலம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனுக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன். சேலம் புறநகர் மாவட்ட ஜெ.பேரவை செயலாளராகவும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அசைக்க முடியாத நபராக திகழ்ந்து வந்தார். நிழல் முதல்வராக செயல்பட்டு வந்த இளங்கோவனுக்கு நாலாபுறமும் இருந்து பணம் கொட்டியது. அமைச்சர்களால் முடியாத காரியத்தைக் கூட இளங்கோவன் செய்து முடித்து கொடுத்து வந்தார்.

இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீடு உள்பட 36 இடங்களில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.  இதில் கணக்கில் வராத 41 கிலோ தங்க நகைகள், 482 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.34.28 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.70 கோடியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் முதலீடு, வெளிநாட்டு பணம் ரூ.5.5 லட்சம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தங்க நகைகள் குறித்த தகவலை பெற்றுக்கொண்ட போலீசார், நகைகளை திரும்ப ஒப்படைத்து விட்டனர்.

இளங்கோவன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.34.28 லட்சம் மற்றும் அமெரிக்கா, இந்தோனேசியா உள்பட 5 நாட்டின் பணம் ரூ.5.5 லட்சம் ஆகியவற்றை சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரைகானா பர்வீன் முன்னிலையில் ஒப்படைத்தனர். இந்நிலையில் சோதனையில் கிடைத்த முக்கிய ஆவணங்களை நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதேநேரத்தில் இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து மேலும் பல்வேறு தொடர் ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். குறிப்பாக அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. ரூ.70 கோடிக்கு அவரது வெளிநாட்டு முதலீடு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ‘‘இளங்கோவன் மற்றும் அவரது நிறுவனங்களில் நடத்திய சோதனையின்போது பிடிபட்ட ஆவணங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த இருக்கிறோம். விரைவில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார். வெளிநாட்டில் முதலீடு செய்யக்கூடிய அளவில் அவருக்கு வருமானம் எப்படி வந்தது? என்ற கேள்விதான் முதல் கேள்வியாக இருக்கும். கேள்விகளுக்கான பட்டியலை தயாரித்து வருகிறோம்,’’ என்றனர்.

* எடப்பாடியிடம் கண்ணீர் சிந்திய இளங்கோவன்

இளங்கோவன் வீட்டில் விஜிலென்ஸ் நடத்திய சோதனையில் வெளிநாட்டில் ரூ.70 கோடி அளவுக்கு முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது நண்பரான எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியடைந்ததாகவும், தனக்கு தெரியாமல் வெளிநாட்டில் முதலீடு செய்தது எப்படி? என குழம்பியதாகவும் தகவல் வெளியானது. இதனால் அவர் இளங்கோவன் மீது கோபமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனை தெரிந்து கொண்ட இளங்கோவன், சேலத்தில் இருந்த எடப்பாடியை சந்திக்காமல் இருந்தார்.  இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு தனியாக வந்த இளங்கோவன், எடப்பாடியை சந்தித்து பேசினார். அவரை பார்த்ததும் இளங்கோவன் கண்ணீர் விட்டு அழுததாகவும், அவரை சமாதானப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, ஆறுதல் கூறி அனுப்பியதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

* பங்களாவின் மதிப்பு என்ன?

இளங்கோவன் புத்திரகவுண்டம்பாளையத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான மிக பிரமாண்டமான பங்களா ஒன்றை கட்டியுள்ளார். அந்த ஊரிலேயே  இவரது பங்களா தான் மிகவும் பெரியதும், விலை உயர்ந்ததுமாகும். அந்த வீட்டில் 2 நவீன லிப்ட் இருக்கிறது. ரிமோட் கன்ட்ரோலில் திறக்கக் கூடிய கதவுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் வீடு கட்டுவதற்கு ரூ.3 கோடி வங்கியில் கடன் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த பங்களாவின் மதிப்பு என்ன? என்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார், அரசு இன்ஜினியர்களை வரவழைத்து கணக்கிடவுள்ளனர்.

Related Stories:

More
>