மேட்டுப்பாளையம் அருகே நெகிழ்ச்சி கரடியிடம் இருந்து எஜமானை போராடி காப்பாற்றிய நாய்

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனையை சேர்ந்தவர் ராமராஜ் (23). விவசாயி. இவரது மனைவி சித்ரா (20). இவர் தனது வீட்டில் பப்பி என்ற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ராமராஜ் சிறுமுகை அடுத்த குஞ்சப்பனை செட்டில்மென்ட் உள்ள தோட்டத்தில் வேலை செய்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் ஒரு கரடி தோட்டத்துக்குள் புகுந்தது. இதைப்பார்த்த  ராமராஜ் அதிர்ச்சியடைந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் கரடி அவரது தலையில் தாக்க முயன்றது. அப்போது கைகளால் கரடியை தடுத்தார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பயத்தில் ராமராஜ் அலறியடித்து ஓடியபோது, அவரை கரடி விரட்டியது.  

சத்தம் கேட்டு நாய் பப்பி ஓடிவந்து பார்த்தது. தனது எஜமான் கரடியுடன் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தது. பின்னர் குரைத்துக்கொண்ட அவருக்கு அரண்போல் நின்று கரடியை எதிர்த்து போராடியது. கரடியை ஆக்ரோஷமாக குரைத்து மிரட்டியது. இதனையடுத்து கரடி குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து அப்பகுதியினர் ராமராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறையினர் ராமராஜனிடம் விசாரித்தபோது, ‘‘எனது செல்ல நாய் பப்பிதான் கரடியிடம் இருந்து போராடி என்னை காப்பாற்றியது  என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Related Stories:

More
>