பணிச்சுமையால் மன அழுத்தம் நெல்லையில் எஸ்எஸ்ஐ விஷம் குடித்து தற்கொலை

கேடிசி நகர்: நெல்லை பாளை. ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக வேலை பார்த்து வந்தவர் பழனி (55). இவரது மனைவி கொரோனாவால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடியிருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பூச்சி மருந்தை திடீரென்று குடித்துள்ளார். மயங்கிக் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பம்பர் வழக்குகள் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எஸ்எஸ்ஐ பழனிக்கு 20 பம்பர் வழக்குகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் 6 வழக்குகள் மட்டுமே பதிவு செய்திருந்தார். இதனால் அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு மாதமாக ‘‘ஹைவே பேட்ரோல்’’ வாகனத்தில் இரவு பணியில் எஸ்எஸ்ஐ ஈடுபட்டிருந்ததால் போதிய தூக்கமின்றி அவதிப்பட்டுள்ளார்.

ஓய்வு எடுக்க விடுப்பு கேட்ட நிலையில் கிடைக்காததால் விரக்தியடைந்துள்ளார். பணியிலிருந்து தன்னை விடுவிக்க விஆர்எஸ்சும் கொடுத்துள்ளார். தொடர் அலைச்சல், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றால் எஸ்எஸ்ஐ பழனி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* உடலை வாங்க மறுப்பு

இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட எஸ்எஸ்ஐ பழனியின் மகன் சுதாகர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று துணை கமிஷனர் சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அதில், ‘‘பழனி தற்கொலை செய்த அன்று அவருக்கு மேல் உள்ள பெண் உயர் அதிகாரி, அவரை குறிப்பிட்ட அளவில் வாகனங்களில் பம்பர் வழக்கு போடவில்லை எனக்கூறி அவதூறாக பேசி உள்ளார். இதனால் மன உளைச்சலில் வீட்டுக்கு சென்ற அவர், தற்கொலை செய்துள்ளார். எனவே, தற்கொலைக்கு காரணமான அந்த அதிகாரி மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தனர். இதற்கு துணைகமிஷனர் சுரேஷ்குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதற்கிடையில் எஸ்எஸ்ஐ பழனி உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சென்று விட்டனர்.

Related Stories:

More
>