நடப்பு நிதியாண்டில் பதிவுத்துறைக்கு ரூ..6974 கோடி வருவாய்: முந்தைய ஆண்டுகளைவிட அதிகரிப்பு

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் பத்திரபதிவுதுறை பணி சீராய்வு கூட்டம் நேற்று காணொலி காட்சி வாயிலாக நடந்தது. கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள், அனைத்து கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் உதவி பதிவுத்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். இதில் 2021-22ம் நிதியாண்டில் அக்டோபர் 2021  முடிய ஈட்டப்பட்டுள்ள வருவாய் குறித்து சீராய்வு செய்யப்பட்டது.

பதிவுத்துறையில் இந்த நிதியாண்டில் அக்டோபர் (26.10.2021) வரை  வருவாய் ரூ.6974.66 கோடி ஈட்டப்பட்டுள்ளது.  இந்த வருவாய் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகமாகும். அப்போது, ‘போலி ஆவணப்பதிவு மற்றும் ஆள்மாறாட்டம் தொடர்பான பிரிவு 68(2)ன் கீழான விசாரணையில், பொதுமக்களின் துயர் தீர்க்கும் வண்ணம் ஆணைகளை பிறப்பிக்க வேண்டும். பொதுமக்கள் அளித்து நிலுவையிலுள்ள மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்பட வேண்டும். அரசின் வருவாயை பெருக்க முழு கவனம் செலுத்த வேண்டும். நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின் உடன்   விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல், சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான யுக்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அரசு செயலாளரால் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: