அதிமுகவில் மோதல் தீவிரமாகிறது முண்டா தட்டும் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: ஆட்களை இழுக்க போட்டா போட்டி

சென்னை: அதிமுகவில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆட்களை இழுப்பதில் போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தற்போது தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருப்பதுபோன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது, கல்வெட்டு வைப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துப் பேசிய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சூரியனைப் பார்த்து எதுவோ குரைப்பது போன்று உள்ளதாக சசிகலாவை தாக்கிப் பேசினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தொண்டனாக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி, யாரைப் பற்றியும் கண்ணியக்குறைவாக பேசக் கூடாது என்று ஓபிஎஸ் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி கொடுத்த சில நிமிடங்களில் ஜெயக்குமார், அதற்கு பதிலடி கொடுத்தார். தொடர்ந்து கே.பி.முனுசாமியும் பதில் அளித்தார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே கட்சி சொந்தம் என்று கொண்டாட முடியாது என்றார். இதனால் அதிமுகவில் சமுதாய ரீதியாக தலைவர்கள் பிரிந்து செயல்படுவது உறுதியானது. அதற்கு ஏற்றார்போல சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளிக்கும்போது அருகில் நின்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா, மணிகண்டன் ஆகியோர் அமைதியாக இருந்தனர். இவர்கள் அனைவருமே எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள். இதனால் இவர்கள் அனைவரும் சமுதாய ரீதியாக ஒன்றிணைந்துள்ளதாகவும், இதனால்தான் கே.பி.முனுசாமி, கண்டனம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மூத்த தலைவர்கள் திடீர் மோதலை தொடங்கியுள்ளதால், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினரிடையே பலப்பரீட்சை தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஜே.சி.டி.பிரபாகர், சுப்புரத்தினம், மோகன் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டுள்ளனர். எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களை இழுக்கும் வேலைகள் தீவிரமாகியுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை எடப்பாடி அணியில் மாவட்டச் செயலாளர்கள் ராஜேஷ், தி.நகர் சத்யா, விருகை ரவி, வெங்கடேஷ் பாபு மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.

ஓபிஎஸ் அணியை பொறுத்தவரை வேளச்சேரி அசோக் மற்றும் பாலகங்கா உள்ளதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரமணா எடப்பாடி அணியில் உள்ளார். ஆனால் ஓபிஎஸ் அணியில் பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி, பலராமன், டாக்டர் வேணுகோபால் ஆகியோர் உள்ளனர். காஞ்சிபுரத்தில் சோமசுந்தரம் எடப்பாடி அணியிலும் வாலாஜாபாத் கணேசன் சசிகலா ஆதரவு அணியிலும் உள்ளதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டதைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில் 10 சதவீதம் பேர் மட்டுமே ஓபிஎஸ் அணியில் உள்ளனர். மாவட்டச் செயலாளர் குமரகுரு தலைமையில் மொத்தமாக எடப்பாடி அணியில் உள்ளனர். விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எடப்பாடியையும், சசிகலாவையும் பிடிக்காமல் உள்ளார்.  ஆனால் அவருக்கு எதிரான 25 சதவீதம் பேர் ஓபிஎஸ் அணியில் உள்ளனர்.

திருவண்ணாமலையில் சேவூர் ராமச்சந்திரன், தூசி மோகன் ஆகியோர் எடப்பாடி அணியிலும், முக்கூர் சுப்பிரமணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஓபிஎஸ், சசிகலா ஆதரவு அணியிலும் உள்ளதாக கூறப்படுகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டமும் சசிகலா ஆதரவு அணியில் உள்ளனர். கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மட்டும் சசிகலா அணியில் உள்ளார். மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எடப்பாடி அணியில் உள்ளார். தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் முழுமையாக எடப்பாடி அணியில் உள்ளனர். ஈரோட்டில் செங்கோட்டையன் சசிகலா ஆதரவு அணியில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சசிகலா ஆதரவு அணியில் உள்ளனர். கோவையில் மாவட்டச் செயலாளர் அருண்குமார், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி ஆகியோர் எடப்பாடிக்கு எதிரணியில் உள்ளனர். திருப்பூர் ஆனந்தன், மகேந்திரன் ஆகியோர் எடப்பாடி அணியிலும் கோவை, நீலகிரியில் பெரும்பாலானவர்கள் வேலுமணி அணியிலும் உள்ளனர். கரூர் மாவட்டம் முழுமையாக எடப்பாடி அணியில் உள்ளது. புதுக்கோட்டை முழுமையாக விஜயபாஸ்கர் கையில் உள்ளது. அவர் யார் பக்கமும் சாயாமல் உள்ளார். மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் தற்போது சசிகலா ஆதரவு மாவட்டங்களாக மாறிவிட்டன.

திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன் மட்டும் எந்த பக்கமும் சாயாமல் உள்ளார். தூத்துக்குடியைப் பொறுத்தவரை கடம்பூர் ராஜூ எடப்பாடி அணியிலும், சண்முகநாதன் ஓபிஎஸ் அணியிலும் உள்ளனர். கன்னியாகுமரி முழுமையாக எடப்பாடி வசம் உள்ளது. நெல்லை, தென்காசியைப் பொறுத்தவரை பாதிக்குப்பாதியாக உள்ளது. டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் சசிகலா அணிக்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், குன்னம் ராமச்சந்திரன், அரியலூர் ராஜேந்திரன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். திருச்சியைப் பொறுத்தவரை எடப்பாடி அணியில் உள்ளனர்.இவ்வாறு தமிழகம் முழுவதுமே தற்போது நிர்வாகிகள் பிரிந்து செயல்படத் தொடங்கிவிட்டனர்.

Related Stories: