எனக்கு ஒரு பொறுப்பே போதும் ராஜஸ்தான் அமைச்சர் பதவி விலக விருப்பம்: சோனியாவுக்கு தகவல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பேட்டூ சட்டமன்ற தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹரிஷ் சவுத்ரி. இவர் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக இருக்கிறார். ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், சக்தி வாய்ந்த அமைச்சராகவும் இவர் கருதப்பட்டு வருகிறார். சமீபத்தில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக கட்சி மேலிடம் இவரை நியமித்தது.

இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக ஹரிஷ் சவுத்ரி நேற்று திடீரென அறிவித்தார்.

மேலும், டெல்லியில் அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, கட்சியின் பல்வேறு அமைப்பின் பிரச்னைகள் குறித்தும் ஆலோசித்தார். இது தொடர்பாக சவுத்ரி கூறுகையில், ‘‘ஒருவருக்கு ஒரு பதவி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கட்சி எனக்கு கொடுத்துள்ள புதிய பொறுப்பை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதற்கு விரும்புகிறேன். இது குறித்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநில பொறுப்பாளர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். எந்த சர்ச்சைக்கும் தீ வைக்க நான் விரும்பவில்லை. அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது எனது தனிப்பட்ட கருத்து. இதை தலைமைக்கு தெரிவித்துள்ளேன்,” என்றார்.

Related Stories:

More
>