எல்லை ஒப்பந்தங்களை மீறும் செயல் சீனாவின் புது சட்டம் ஒருதலைபட்சமானது: இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: `சீனா நிறைவேற்றி உள்ள எல்லை சட்டம் ஒருதலைபட்சமானது,’ என்று இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள அசல் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா இடையே கடந்தாண்டு மே மாதம் முதல் எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த சூழலில் சீன நாடாளுமன்றத்தில் எல்லை நில பாதுகாப்புச் சட்டம் கடந்த 23ம் தேதி நிறைவேற்றப்பட்டது. சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டம் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி, பிராந்திய இறையாண்மை, எல்லைகளை குறைத்து மதிப்பிடும் எந்தவொரு செயலையும் சீனா எதிர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.எல்லைகளில் ஆக்கிரமிப்பு, படையெடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை சீன ராணுவம் உறுதியுடன் எதிர்க்கும். தேவைப்படும் பட்சத்தில், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்,’ என்றும் சீனா கூறியுள்ளது. இந்நிலையில், ‘சீனாவின் இந்த புதிய சட்டத்தால் எல்லை பிரச்னையை தீர்ப்பதில் சிக்கல் ஏற்படும்.

இச்சட்டத்தின்படி எல்லையில், ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை தொடங்க சீன ராணுவத்திற்கு எந்த அதிகாரமும் வழங்கப்பட கூடாது,’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டிப்புடன் எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாச்சி கூறுகையில், ``சீனாவின் புதிய நில பாதுகாப்பு சட்டம் ஒருதலைபட்சமான நடவடிக்கையாகும். இது ஏற்கனவே, இருநாடுகளுக்கும் இடையிலான நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தங்களை மீறும் செயலாகும். அதில் கூறப்பட்டுள்ளபடி, எல்லை பகுதியில் நடவடிக்கை எடுப்பதை சீனா தவிர்க்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது,’’ என்றார்.

Related Stories: