முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால், அதன் நீர்மட்டத்தில்  எந்தவித மாற்றமும் செய்ய தேவையில்லை,’ என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய நீர்வள ஆணையம் கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு மற்றும் இயக்க முறைகள் சரியாக இல்லை என ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் மழைக் காலத்தில் எவ்வளவு கன அடி நீரை சேமித்து வைக்க முடியும்? என்பது குறித்து ஒன்றிய நீர்வளத்துறை பதிலளிக்க வேண்டும் என்று இரு தினங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக,  முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,‘முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்பாக உள்ளது. எனவே, நீர்மட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. இருப்பினும் தற்காலிகமாக நீர் குறைத்து தேக்குவது தொடர்பாக நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், அதனை செயல்படுத்த தயாராக உள்ளோம்,’ என தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே மற்றும் உமாபதி வாதத்தில், ‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 கன அடியாக தான் தற்போது இருக்கிறது. மேலும் மழைப் பொழிவும் அந்த பகுதியில் இல்லாததால் இந்த விவகாரம் குறித்து எதுவும் விசாரிக்க தேவையில்லை. அதற்கான அவசியமும் கிடையாது. 141 கன அடிக்கு மேல் நீட் மட்டத்தை உயர்த்தினாலும் அணை பாதுகாப்பானது தான் என முந்தைய பல ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவில்  வதந்திகள் பரப்பப்படுவது கவலை அளிக்கிறது,’ என தெரிவித்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வாதத்தில், ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை முழுமையாக கேரளாவின் வசம் ஒப்படைக்க வேண்டும். மேலும், தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைப்பது கேரள அரசு உறுதி அளிக்கும் வகையில் ஏதுவான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக கேரளாவில் கன மழை பெய்து வருவதால் 142 அடி நீரை அணையில் தேக்கக் கூடாது. அது அபாயகரமான ஒன்றாகும். எனவே, தற்போதைய சூழலில் அணையில் 139 கனஅடி நீர் அளவு மட்டுமே தேக்குவதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்,’ என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,‘முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 137 அடி நீர்மட்டமே இருப்பதால், மனுதாரின் கோரிக்கையான 139அடியை விட அது குறைவாக தான் உள்ளது. எனவே, இதுதொடர்பாக அடுத்து விரிவாக விசாரணை மேற்கொள்ளலாம். இருப்பினும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள அறிக்கைக்கு கேரள அரசு மற்றும் மனுதாரர் ஆகியோர் நாளைக்குள்(இன்று) பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

* நாளை அணை திறப்பு

கேரள நீரப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘முல்லைபெரியாறு அணைக்கு தற்போது விநாடிக்கு 3,800 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2300 கன அடி தண்ணீர் தமிழகம் கொண்டு செல்கிறது. நேற்றிரவு இரவு 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 137.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் நீர்மட்டம் மேலும் அதிரிக்க வாய்ப்பு உள்ளது. அணைக்கு நீர் வரத்து குறையாவிட்டால் நாளை(29ம் தேதி) காலை 7 மணிக்கு அணை திறக்கப்படும். இது தொடர்பாக, கேரளாவுக்கு தமிழக அரசு முறைப்படியாக தகவல் தெரிவித்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>