திருவள்ளூர் மாவட்டத்தில் 8 இடங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும்: பேரிடர், மேலாண்மை துறை இயக்குநர் தகவல்

திருவள்ளூர்:வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பணிகள் தொடர்பாக மாநில இயற்கை பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை இயக்குநர் டாக்டர் சுப்பையன், கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாநில இயற்கை பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை இயக்குநர் டாக்டர் சுப்பையன், செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் மாவட்டந்தோறும் வெள்ளச்சேதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்படுகிறது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தயாராக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 8 இடங்கள் வெள்ளச்சேதத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக வெள்ளத்தை வெளியேற்றும் வகையில் 128 ராட்ச மோட்டார்கள், ஆற்றோரங்களில் ஏற்படும் உடைப்புகளை தடுக்கும் வகையில் 7 பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் தலா 30 ஆயிரம் மணல் மூட்டைகள், 10 டன் அடைப்பு கம்புகளும் தயாராக உள்ளன.

மேலும், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து 1027 என்ற எண்ணில் தகவல் தெரிவித்தால் அனைத்து துறையினரும் உதவிக்கு தயாராக உள்ளனர். அதேபோல், கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்றின் கரையோரங்களில் பலவீனமான பகுதிகள் கண்டறிந்து பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜி.கார்த்திகேயன், கௌரி சங்கர் உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Related Stories:

More
>