திருப்போரூர் பஸ் நிலையத்தில் இடையூறாக நின்ற வாகனங்கள் பறிமுதல்: பேரூராட்சி நிர்வாகம் அதிரடி

திருப்போரூர்: திருப்போரூர் பஸ் நிலையத்தில், இடையூறாக நின்ற வாகனங்களை பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக பறிமுதல் செய்தது. திருப்போரூர் பஸ் நிலையத்தை ஒட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளது. இது தனியாருக்கு ஏலம் விடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இங்கு தினமும் 150 முதல் 200 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனாலும், பல்வேறு கிராமங்களில் இருந்து திருப்போரூர் வந்து, அங்கிருந்து சென்னை செல்லும் பலரும் தங்களது வாகனங்களை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் பேரூராட்சி அலுவலகம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், பஸ் நிலையத்தின் உள்ளே வரும் மாநகரப் பஸ்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றன.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன் விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. ஆனாலும், வாகனங்களை ஆங்காங்கே பொதுமக்களுக்கும் பஸ்களுக்கும் இடையூறாக நிறுத்தி செல்வது தொடர்ந்தது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிரடியாக தாறுமாறாக நிறுத்தப்பட்ட வாகனங்களை நேற்று அதிரடியாக பறிமுதல் செய்து இடமாற்றம் செய்யப்பட்டது. பேரூராட்சி ஊழியர்கள் மூலம் பஸ் நிலையத்தின் உள்ளே முறையற்று நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அகற்றப்பட்டு வாகன நிறுத்துமிடத்திற்கு மாற்றப்பட்டன. இனி இதுபோல் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>