பாழடைந்த கட்டிடத்தில் செயல்படும் ரேஷன்கடை: புதிய கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் திருத்தேரி பிள்ளையார் கோயில் தெருவில், சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்ட ரேஷன்கடை உள்ளது. இந்த கடை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய நிலையில், மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், இங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வரும் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் வந்து, பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும், கடையின், மேல்பகுதி சிதிலமடைந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மழை காலங்களில், மழைநீர் விரிசல் ஏற்பட்டுள்ள சுவர் வழியாக உள்ளே புகுந்து சேமித்து வைக்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்பட அனைத்து உணவு பொருட்களும் நனைந்து வீணாகின்றன. மழைநீரில் அரிசி மூட்டைகள் நனைவதால், பழுப்பு நிறமாக மாறி, சிறு சிறு பூச்சிகள் உருவாகின்றன. இதை பார்க்கும் பொதுமக்கள், தரமில்லாத அரிசி வழங்குவதாக கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, கட்டிடத்தில் பெருச்சாளிகள் பள்ளம் தோண்டி, உள்ளே நுழைந்து, உணவு பொருட்களை சாப்பிடுகின்றன.

இந்த ரேஷன்கடையில், 800 குடும்ப அட்டைகளுக்கான பொருட்கள் வழங்க வேண்டும். கடந்த 2011ம் ஆண்டு இந்த கடையை சீரமைப்பதாக கூறி, அதற்கான நிதியை ஒதுக்கி, மேலோட்டமாக பழுது பார்த்தனர். ஆனால், சில மாதங்களிலேயே மீண்டும் பழைய நிலைமைக்கே மாறி, இன்று வரை இடிந்து விழும் நிலையில் அந்த ரேஷன்கடை இயங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பாழடைந்துள்ள கட்டிடத்தில் செயல்படும் ரேஷன் கடையை இடித்துவிட்டு புதிய ரேஷன் கடையை கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More
>