கிழக்கு கடற்கரை சாலையில் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு: சாரை சாரையாக வந்த திமுகவினர்

திருப்போரூர்: விழுப்புரம் நோக்கி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திருப்போரூர் ஒன்றிய திமுக சார்பில், கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு காலங்களில் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவிகளிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளி, மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மாணவர்களின் கல்வித் திறனில் எந்தவொரு குறைபாடும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதையொட்டி, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைக்க, சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை காரில் புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, செங்கல்பட்டு மாவட்ட எல்லையான கானத்தூர் ரெட்டிக் குப்பம் கிராமத்தில் மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு ஊரகத் தொழில் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சத்யா சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் கானத்தூர், முட்டுக்காடு, கோவளம் ஆகிய இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அப்போது, சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

மாமல்லபுரம்: கிழக்கு கடற்கரை சாலை வழியாக மரக்காணம் நோக்கி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் நுழைவாயில் அருகே காஞ்சிபுரம் மாவட்ட திமுக துணை செயலாளர் மாமல்லபுரம் வெ.விஸ்வநாதன் தலைமையில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் கிழக்கு கடற்கரை கூட்டு சாலையில், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.தமிழ்மணி தலைமையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு, துணை தலைவர் எஸ்.ஏ.பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் வெங்கப்பாக்கம் பாபு  மற்றும் புதிதாக வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் இளையனார்குப்பத்தில், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர். மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், நிர்வாகிகள் தாமோதரன், கயல் மாரிமுத்து, தாஜூதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காத்தான்கடையில் லத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் தலைமையிலும், முகையூரில் தெற்கு ஒன்றிய செயலாளர் முகையூர் பாபு தலைமையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

* முதல்வருக்கு சாக்லெட் கொடுத்த சிறுமி

கிழக்கு கடற்கரை சாலை, கல்பாக்கம் அடுத்த இளையனார்குப்பம் பகுதியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 5ம் வகுப்பு படிக்கும் சப்ரின் என்ற இஸ்லாமிய சிறுமி, முதல்வர் சென்ற வாகனத்தை பார்த்து கையை நீட்டினார். இதை பார்த்த முதல்வர், காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறினார். அந்த சிறுமியை உறவினர்கள், முதல்வரின் வாகனம் அருகே அழைத்து சென்றனர். அப்போது, அந்த சிறுமி தனது கையில் இருந்த சாக்லெட்டை முதல்வருக்கு கொடுத்தாள். அதற்கு, ‘‘நான் சாக்லேட் சாப்பிட மாட்டேன். நீ சாப்பிடும்மா. நீ நன்றாக படிக்க வேண்டும்’’ என மகிழ்ச்சியுடன், சிறுமியிடம் பேசிவிட்டு, முதல்வர் காரில் புறப்பட்டு சென்றார்.

Related Stories: