ஆஸ்கருக்கு சர்தார் உதம் தேர்வு ஆகாதது ஏன்? ரசிகர்கள் கடும் கண்டனம்

புதுடெல்லி: உலகில் மிகப்பெரிய திரைப்பட விழாவாக ஆஸ்கர் விருது விழா நடத்தப்படுகிறது. 94வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கிறது. ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டு 15 பேர் கொண்ட தேர்வு குழு தமிழில் வெளியான கூழாங்கல் என்ற திரைப்படத்தை ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்தது. சுதந்திர போராட்ட வீரர் உதம் சிங்கின் வாழ்க்கையை தழுவி உருவான சர்தார் உதம் படம் தேர்வாகும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த சூழ்நிலையில் அந்த படம் தேர்வாகாததால் பலரும் அதிருப்தி அடைந்தனர். இந்த படம் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை லண்டனில் சுட்டுக் கொன்ற உதம் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. இந்த நிலையில் இந்த படம் ஏன் தேர்வாகவில்லை என்பது குறித்து தேர்வுகுழு உறுப்பினர் இந்தரதீப் தாஸ்குப்தா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: சர்தார் உதம் நல்ல படம்தான். ஆனால் இப்படம் அதிகம் ஆங்கிலேயர்கள் மீதான நமது வெறுப்பை சித்தரிக்கிறது, மேலும் இப்படம் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை பற்றி நீளமாக சித்தரிக்கிறது. இந்திய சுதந்திர போராட்டத்தின் இதுவரை வரலாற்றில் அதிகம் பேசப்படாத ஒரு போராளியை பற்றி பெரும் பொருட்செலவில் படம் எடுப்பது நேர்மையான முயற்சி என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் திரைப்பட உருவாக்கத்தில், அது மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்கள் மீதான நமது வெறுப்பை வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கிறது.

உலகமயமாக்கலின் இந்த காலகட்டத்தில், இந்த வெறுப்பை இன்னமும் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. மற்றபடி படத்தின் தயாரிப்பு சர்வதேச தரத்தில் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளது என்றார்.ஆங்கிலேயர்கள் உலகையே ஆட்டிப்படைக்க முயற்சித்த காலத்திலும், உலக போர்களின்போதும் ஆங்கிலேயர்களை கடுமையாக விமர்சித்து வெளியான பல படங்கள் ஆஸ்கர் விருது பெற்றிருப்பதை சுட்டிக் காட்டி ரசிகர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories:

More
>