முகப்பேரில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது: பட்டாக்கத்தி, செல்போன் பறிமுதல்

அண்ணாநகர்: முகப்பேரில் நடந்து சென்றவரிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகளை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி, செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை முகப்பேர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜன் (48). இவர் நேற்று மாலை முகப்பேரில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்தனர்.

பின்னர் ராஜனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். ராஜனின் அலறல் சத்தம் கேட்டு, தப்பி ஓடிய 2 மர்ம நபர்களையும் பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தனர். அப்போது அந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் பட்டாக்கத்தியை வீசி, தங்களை பிடித்தால் கொன்றுவிடுவோம் என மிரட்டினார். இதனால் பொதுமக்கள் அவர்களை வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நொளம்பூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பிடித்து வைத்திருந்த 2 மர்ம நபர்களையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்த ரவுடி சேனிஸ் (எ) சேனிஸ்குமார் (23), ஆவடியை சேர்ந்த ரவுடி செல்வகுமார் (எ) ஹானஸ்ட்ராஜ் (25) எனத் தெரியவந்தது. நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ராஜனிடம் இருந்து பறித்த செல்போன், பட்டாக்கத்தி, பணத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 ரவுடிகள்மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

Related Stories:

More
>