பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் பறிமுதல்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட போதை பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பழைய விமானநிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் வந்திருந்த பார்சல்களை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். நெதர்லாந்தில் இருந்து ஆந்திரா மாநிலம் முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சலில் பிறந்தநாள் வாழ்த்து பரிசு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் மிகவும் விலையுயர்ந்த போதை மாத்திரைகள் 10 மற்றும் போதை பவுடர் 8 கிராம் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர்.

அமெரிக்காவில் இருந்து ஆந்திரா மாநில முகவரிக்கு வந்திருந்த மற்றோரு கொரியர் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் திருமண நாள் பரிசு பொருள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது 132 கிராம் கஞ்சா இருந்தது. ஸ்பெயின் நாட்டில் இருந்து சென்னை முகவரிக்கு பரிசு பொருட்கள் என்று குறிப்பிட்டு வந்திருந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது 10 கிராம் உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த மற்றொரு கொரியர் பார்சலில் விளையாட்டு   பொம்மை ரயில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றையும் பிரித்து அதிகாரிகள் பார்த்தபோது உயர்ரக போதை மாத்திரைகள் 261 இருந்தது. சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள், பவுடர்கள், பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா ஆகியவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் மற்றும் போதை தடுப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More
>