பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கள்ளச்சந்தையின் மூலம் பணமாக்க முயன்ற 5 பேர் கும்பல் கைது

பெங்களூரு: பெங்களூருவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து அவற்றை கள்ளச்சந்தையில் கோடிக்கணக்கில் பணமாக்க முயன்ற 5 பேர் கும்பலை போலீசார் கைதுசெய்துள்ளனர். பெங்களூரு HSR Layout பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றிய சிலரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதிலளித்ததால் கையில் வைத்திருந்த பையை வாங்கி பார்த்திருக்கின்றனர்.

அதில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற போலீசார் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து அவற்றை கள்ளச்சந்தையில் பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதை தெரியவந்தது. அத்துடன் கேரளாவில் இருந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்த போலீசார் கேராளாவுக்கு சென்று குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியபோது பெட்டிபெட்டியாக தடை செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட 2 பேரை தேடி வருவதாகவும் கவால்துறையினர் தெரிவித்துள்ளனர்.                           

Related Stories: