முட்டல் ஆனைவாரி அருவி திடீர் வெள்ளத்தில் சிக்கி குழந்தையுடன் தவித்த தாயை மீட்ட இளைஞர்களுக்கு முதல்வர் பாராட்டு

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த முட்டல் ஆனைவாரி அருவி வெள்ளப்பெருக்கில் குழந்தையுடன் சிக்கித்தவித்த  தாயை  இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டனர். தன்னுயிர் பாராமல் காப்பாற்றிய இளைஞர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் முட்டல் ஆனைவாரி அருவி உள்ளது. இங்கு வார விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் திரண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அதேபோல் கல்வராயன் மலை தொடரிலும் பெய்த மழையால் முட்டல் ஆனைவாரி  அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டு அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நீர்வத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவியில் குளித்து கொண்டிருந்த 4 பேர் மறுகரைக்கு சென்று சிக்கிக் கொண்டனர். இதில் குழந்தையுடன் சிக்கி தவித்த இளம்பெண்,  அதிர்ச்சியில் செய்வதறியாமல் தவித்தார். அப்போது சற்றும் யோசிக்காமல் 2 இளைஞர்கள் கயிறு கட்டி, மறுகரைக்கு சென்று  குழந்தை மற்றும் தாயை பத்திரமாக மீட்டனர்.

அதேநேரத்தில் அவர்கள் நிலைதடுமாறி அருவியில் விழுந்தனர். பின்னர், 2 பேரும் நீச்சலடித்து கரை ஏறினர். இதனிடையே அருவிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர், இதனை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு சென்றது. தொடர்ந்து, அவர் டிவிட்டரில் வீடியோவை பதிவிட்டு, ‘‘தாயையும், சேயையும் காப்பாற்றியவர்களின் தீரம் மிக்க செயல் பாராட்டுக்குரியது. அவர்கள் அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்கத் துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது.

பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்,’’ என்று  இளைஞர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். இதனிடையே தங்களது உயிரை பொருட்படுத்தாமல் குழந்தையும், தாயையும் காப்பாற்றிய இளைஞர்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த முபராக் மகன் அப்துல் ரகுமான் (33), தர்மபுரி மாவட்டம் வெள்ளிமலை தொரடிபட்டு பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் சண்முகம் (27) மற்றும் வனத்துறை ஊழியர்கள் கார்த்திக், காவேந்திரன் என்பது தெரியவந்தது. முதல்வரின் பாராட்டை தொடர்ந்து பொதுமக்களும் இந்த இளைஞர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Stories:

More
>