கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ: 7 பேர் பலி: பலர் படுகாயம்

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாகினர். சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகில் செல்வகணபதி மளிகை கடை, பட்டாசு கடை நடத்தி வருகிறார். நேற்று பட்டாசுகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென பட்டாசு வெடித்து கடையில் தீப்பற்றியது. இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த அன்னம்மாள், சாந்தினி, சிவகாமி, சரிதா, பரமேஸ்வரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் தப்பித்து வெளியே ஓடி வந்தனர்.  இருப்பினும் தீ அதிவேகமாக அருகில் இருந்த பேக்கரி மற்றும் துணிக்கடைக்கும் பரவியது.

அப்போது கடையில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் பட்டாசுகள் மற்றும் கடைகளின் சுவர்களில் இருந்து தூக்கி எறியப்பட்ட கற்களும் ஆங்காங்கே பறந்து சென்று விழுந்தது. அப்போது சாலை ஓரம் நின்றிருந்த சங்கராபுரத்தை சேர்ந்த காலித் (23), ஷா ஆலம் (24), பூ வியாபாரி ஷேக் பஷீர் (72) மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் உள்பட 6 பேர் மீது கற்களுடன், பட்டாசுகளும் விழுந்து வெடித்து சிதறியதில் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு கடையின் மேல்பகுதியில் 4 பேர் வேலை செய்ததாக கூறப்படுகிறது.

அவர்களில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மற்றவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. பட்டாசு கடையின் உரிமையாளர் செல்வகணபதியும் படுகாயம் அடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 5க்கும் மேற்பட்டோர் சங்கராபுரம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயை அணைக்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளன.  தகவலறிந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

* பலியானவர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

முதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக்கடை தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தது அறிந்து வேதனையடைந்தேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம், தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன், என பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More
>