நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.! 18 வயது நிரம்பியவர்கள் நவ.30 வரை பெயர் சேர்க்கலாம்: நாளை மறுதினம் அனைத்துக்கட்சி கூட்டம்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது: 1.1.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 1.11.2021 அன்று வெளியிடப்படும். 1.11.2021 முதல் 30.11.2021 வரை புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய காலஅவகாசம் அளிக்கப்படும். இந்த மனுக்கள் மீது  20.12.2021 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியல் சேர்க்கப்படுவார்கள். இதை தொடர்ந்து 5.1.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

1.11.2021 முதல் 30.11.2021 வரையிலான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யும்போது ஒரு வாக்காளர் அல்லது ஒரு தகுதியுள்ளவர்கள் தங்களது பெயரை பதிவு செய்யவோ அல்லது நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளிக்கலாம். அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட ஆவணம்  ஒன்றின் நகலை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம். வயது சான்றாக, பிறப்பு சான்றிதழின் நகல், பள்ளி நிறைவு சான்றிதழின் நகல் ஆகியன சமர்ப்பிக்கலாம்.  www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் \\”வாக்காளர் உதவி\\” கைப்பேசி செயலி (VOTER HELP LINE Mobile App) ஆகிய ஆன்லைன் முறையின் மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 29ம் தேதி (நாளை மறுதினம்) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>