6 மாதங்களில் விசாரித்து முடிக்கும் வகையில் மருத்துவர்கள் மீதான புகார்களை விசாரிக்க குழு: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவர்கள் மீதான புகார்களை, 6 மாதத்திற்குள் முடிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டுமென்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிச்சுமணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக 2015 செப்டம்பர் 27ல் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பலனளிக்காததால் அக்டோபர் 11ல் இறந்துள்ளார். இதற்கிடையில் தன் தந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கோவையை சேர்ந்த மருத்துவர் ராதாகிருஷ்ணன் போலியாக மருத்துவ தகுதி சான்று கொடுத்து, அவருடைய மருமகன் பெயரில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பதிவு செய்ததாக பிச்சுமணியின் மகள் சுபிதா தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்திருந்தார்.  

டாக்டர் ராதாகிருஷ்ணன் மீதான புகாரில் விசாரணைக்கு சாட்சி சொல்வதற்காக மருத்துவமனையின் முதன்மை மருத்துவ ஆலோசகராக இருந்த பாசுமணியை அழைத்து அவரின் பதிவை 6 மாதங்களுக்கு நீக்கி மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பாசுமணி தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் பாசுமணிக்கு எதிராக மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்படவில்லை. சாட்சியமளிக்க மட்டுமே சென்ற நிலையில் தவறான தகவல் தெரிவித்ததாக கூறி அவர் விளக்கம் அளிக்கக்கூட வாய்ப்பளிக்காமல் பதிவை ரத்து செய்த உத்தரவு செல்லாது.

இந்திய மருத்துவ கவுன்சில் என்பது தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்ட பிறகும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான புதிய விதிகளை வகுக்கவில்லை. நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். மருத்துவர்களுக்கு எதிராக புகார் வந்தால்  சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்று விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த குழு சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விளக்கம் கேட்டு முடிவெடுக்கும் வகையில், 3 நபர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும். மருத்துவர்களுக்கு எதிராக எந்த ஒரு புகாராக இருந்தாலும் 6 மாதத்தில் விசாரணை முடிக்கும் வகையில் அக்குழுவிற்கு அதிகாரம் வழங்க வேண்டும். புகார் தொடர்பான மருத்துவ ஆவணங்களை 3 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்ற காலவரையறை 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: