டிசம்பரில் நடக்கும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி-ஓபிஎஸ் பலப்பரீட்சை: பணம், பதவி ஆசை காட்டி வலைவிரிப்பு

சென்னை: டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி, ஓபிஎஸ் பலப்பரீட்சையை தொடங்கியுள்ளனர். அதிமுகவில் இரு அணிகளும் ஆதரவாளர்களை திரட்டுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பணம், பதவி ஆசையை காட்டி தங்கள் பக்கம் இழுக்க இரண்டு தரப்பும் தீவிரமாக முயற்சித்து வருவதால், கோஷ்டிபூசல் உச்ச கட்டத்தில் இருக்கிறது.  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில், அவர் மீண்டும் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளார். பிரிந்துள்ள அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். தற்போது அவர் தமிழகம் முழுவதும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் என்று பெயரிட்டு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். இதற்கு, அதிமுக தரப்பில் எடப்பாடி கே.பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், சசிகலா தொடர்பாக நிருபர்கள் எடப்பாடியிடம் கேள்வி கேட்டபோது, ‘சூரியனைப் பார்த்து ஏதோ ஒன்று குரைப்பது’ போன்று என்று பொருள்படும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார்.

மேலும், ஒரு போதும் அவரை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்றும் கூறினார்.  எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுப்பதுபோல, ஓபிஎஸ் நேற்று முன்தினம் அளித்த பேட்டி அமைந்தது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேட்டியில், ‘கட்சி தொண்டர்கள், தலைவர்கள் பேசும்போது நாகரிகத்தை கடைப்பிடிக்க ேவண்டும்’ என்பதை தனக்கே உரிய பாணியில் பேசினார். இது முழுக்க முழுக்க எடப்பாடிக்கு கண்டனம் தெரிவிப்பது போல இருந்தது. அது மட்டுமல்லாமல் பேட்டியில் ஓ.பி.எஸ்., ‘சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள்’ என்றும் கூறியிருந்தார். இதன் மூலம் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் மறைமுக ஆதரவு தெரிவிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஓபிஎஸ் ஏன் இப்படி பேசினார் என்பது தொடர்பாக, தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சட்டப்பேரவை தேர்தல் நேரத்தின்போது சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று பாஜ மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியோர் பாஜ மேலிடத்தின் கருத்தை கேட்கவில்லை.

இதனால், தான் சட்டப்பேரவை தேர்தல் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில் வரும் டிசம்பரில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை நவம்பரில் வெளியிட வேண்டும். அவைத்தலைவர் தான் ெபாதுக்குழு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவால் அதிமுகவில் புதிதாக அவைத்தலைவரை நியமிக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது. ஓ.பி.எஸ். அதிமுக அவைத்தலைவராக முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி.பிரபாகரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி, தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இரட்டை தலைமைக்கு முடிவு கட்டி, பொதுச்செயலாளர் பதவியை பிடித்து ஒற்றை தலைமையில் கட்சியை வழி நடத்த எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இதனால், பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி ஆதரவு திரட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி காய் நகர்த்தி வருகிறார்.

அதே நேரத்தில் தற்போது உள்ளது போலவே இரட்டை தலைமை தொடரலாம், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர வேண்டாம் என்ற முடிவில் ஓ.பி.எஸ்.இருந்து வந்தார். எடப்பாடி பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கும் தகவல் தெரிய வரவே தான், ஓ.பி.எஸ். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்கவும் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பதவி, பணம் போன்றவற்றை வழங்கவும் இரு தரப்பிலும் வாக்குறுதிகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ்.ஸின் பேட்டியை அடுத்து முக்குலத்தோர் தலைவர்கள், எம்எல்ஏக்களிடம் எடப்பாடி உடனடியாக அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது எடப்பாடிக்கு கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்த பொன்னையன், கே.பி.முனுசாமி, பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கிவிட்டனர்.

அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டியளிக்கும்போது அருகில் தென் மண்டலங்களைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் இருந்தனர். அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் கருத்தை ஆதரிப்பதுபோல இருந்தனர். இது எடப்பாடி ஆதரவாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான 10 பேர் கொண்ட எம்எல்ஏக்கள் குழு இரு பக்கமும் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது. மேலும், சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ள வைத்தியலிங்கம் மட்டும் எந்த பதிலையும் சொல்லாமல் உள்ளார். சி.வி.சண்முகம் சகிலாவை மீண்டும் கட்சியில் இணைக்காத பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டார். அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும் என்று முடிவு எடுத்தால் ஓ.பி.எஸ்., எடப்பாடியுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளார். அதே நேரத்தில் பொதுச்செயலாளர் என்ற ஒற்றை தலைமை முடிவை எடுத்தால் ஓ.பி.எஸ்., எடப்பாடிக்கு எதிரான முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இதனால், டிசம்பரில் பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக அதிமுகவில் மீண்டும் பிரச்னை பூதாகரமாக வெடிக்க தொடங்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து சமாதான முயற்சியில் அதிமுகவின் மற்ற தலைவர்கள் இறங்கியுள்ளனர். அதே நேரத்தில் யார் பெரியவர் என்ற பரீட்சையில் ஓ.பி.எஸ், இபிஎஸ் தற்போது இறங்கியுள்ளனர். இதற்காக இரண்டு பேரும் ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பாமகவை கூட்டணியில் சேர்த்ததால் தான் வடமாவட்டத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டது என்று சி.வி.சண்முகம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவரும் தற்போது தன்னுடைய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆதரவு திரட்டி வருகிறார். இதுவும் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வரும் மாதத்தில் அதிமுகவில் பூகம்பம் வெடித்து, கட்சி மீண்டும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுகவில் இப்போதே பரபரப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

எதுவும்  சொல்ல  முடியாது: செங்கோட்டையன் எஸ்கேப்

ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: பிரச்னைகளில் இருந்து தப்பிக்கவே தமிழக அரசை நான் புகழ்ந்து பேசியதாக திருப்பூர் எம்பி சுப்பராயன் தெரிவித்துள்ளார். அது சரியானதல்ல. சசிகலா குறித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறிய கருத்து குறித்து நான் எந்த கருத்தையும் வெளியிட தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: