தமிழக பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஆவின் இனிப்புகளையே வழங்க வேண்டும்: அனைத்து செயலாளர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்போது, ஆவின் இனிப்பு வகைகளை வாங்க வேண்டும் என்று அனைத்து அரசு துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ஆவின் நிறுவனம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாகு, ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்களாக தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் விற்கப்படுகிறது. அதேபோன்று, ஆவின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்காக சிறப்பு இனிப்பு வகைகளை செய்து விற்பனை செய்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு கடந்த 11ம் தேதி முதல் புதிய இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, காஜுகத்லி கால் கிலோரூ.225, தட்டி மில்க் கேக் கால் கிலோரூ.210, மோத்தி பாக் கால் கிலோரூ.170, காஜு பிஸ்தா ரோல் கால் கிலோரூ.275, காபி பிளேவர்டு மில்க் பர்பி கால் கிலோரூ.210 எனவும், மேற்கண்ட ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு அரை கிலோரூ.425 என விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் சுகாதாரமான முறையில், நெய்யில் தயாரிக்கப்படுகிறது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய, தங்கள் துறை சார்ந்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்போது ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டும். மேலும், தங்கள் துறை சார்ந்த அலுவலக கூட்டங்களில் இனிப்பு வழங்கும்போது, ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்ய வேண்டும்.

Related Stories: