மின்சாரத்தால் பாதிக்காமல் மக்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? தமிழகத்தில் மழை தொடங்கிய நிலையில் வழிகாட்டுதல்களை வெளியிட்டது மின்வாரியம்

சென்னை: தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரியம் வெளியிட்டுள்ள வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: காற்று மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் உள்ளிட்டவற்றின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லவோ, அதை தொட முயற்சிக்கவோ கூடாது. இடி, மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள். அந்த நேரத்தில் தொலைக்காட்சி, அரவை இயந்திரம், கணினி, கைப்பேசி, தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகிலும் இருக்கக் கூடாது.

சுவிட்ச், பிளக் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். மின்கம்பத்திலோ அதைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டக் கூடாது. மின்கம்பத்திலோ, மின்கம்பிகளிலோ துணிகளை காய வைக்கக் கூடாது. மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியின் அருகே சிறுநீர் கழிக்கக் கூடாது. மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனே மெயின் சுவிட்ச்சை நிறுத்த வேண்டும். இஎல்சிபி என்னும் மின்கசிவு தடுப்பு சாதனத்தை மெயின் சுவிட்ச் அருகில் பொருத்த வேண்டும். இது, பழுதான மின் வயரிங் மற்றும் பழுதான மின்சாதனங்கள் ஆகியவற்றில் ஏற்படும் மின்கசிவுகளைக் கண்டறிந்து மின்னோட்டத்தை நிறுத்தி விபத்தை தவிர்க்கும். நாள் ஒன்றுக்கு மனிதர்கள், கால்நடைகள் என 3 பேர் மின்விபத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குறிப்பிடப்பட்ட தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, மின்விபத்தை தவிர்க்க வேண்டும்.

Related Stories: