வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்.! அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2வது நாளாக ஆஜர்: நிதி நிறுவன முதலீடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த  வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2வது நாளாக நேற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, மேல் விசாரணைக்கு தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஆஜராவதாக கடிதம் கொடுத்தார். அதற்கு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தார். அவரது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி கரூர், சென்னை உட்பட 26 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.  

அதைதொடர்ந்து கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், உறவினர்கள், உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அதன்படி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் ஆஜரானார். 11 மணிநேரம் அவரிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், 2வது நாளாக நேற்று காலை 10.30 மணிக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். மதியம் 1.30 வரை அதாவது 3 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. அப்போது, மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் சேகர் பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக தனது நிறுவனங்கள், மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ரூ.25.56 லட்சம் பணம் எந்த வருமானத்தில் வந்தது. அதற்கான ஆவணங்கள் என்ன என்பது குறித்த கேள்விகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் மற்றும் அதற்கான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்து கொண்டனர். விசாரணையின் போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீபாவளி பண்டிகைக்கு சொந்த வேலைகள் இருப்பதாகவும், இதனால் தீபாவளிக்கு பிறகு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக கடிதம் அதிகாரிகளிடம் அளித்தார். அதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். அப்போது, விசாரணையின்போது அனைத்து ஆவணங்களை கையில் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தேர்தலின்போது ஏற்கனவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு கால அவகாசம் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் கடிதம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>