ஆத்துப்பாக்கம் கிராமத்தில் செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயம், கால்நடை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட விவசாய நிலத்தில் சிம்சன் குடியிருப்பு விற்பனை நகர் உருவாக்கப்பட்டு அதில் சில குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு முன்பு அந்த குடியிருப்பு பகுதிகளில் ஓரமாக தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைப்பதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் உள்பட கிராம மக்கள் ஒன்றிணைந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் செல்போன் டவர் அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என பலமுறை மனுக்கள் அளித்தனர். ஆனால் இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் நிறுவுவதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு வேலைகள் தொடங்கியது. இந்நிலையில், தகவலறிந்த ஆத்துப்பாக்கம் கிராம மக்கள் நேற்று மதியம் ரெட்டம்பேடு சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த  அரசு பேருந்துகளை வழிமறித்தனர். தகவலறிந்த கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்கள், `செல்போன் டவர் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டாம். செல்போன் டவர்களில் ஏற்படும் கதிர்வீச்சால் ஏற்கனவே எங்கள் பகுதியில் ஊனமுற்றோர், செவித்திறன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளது. மேலும் இந்த செல்போன் டவர் நிறுவினால் எங்கள் பகுதியில் குழந்தைகளை  அதிக அளவில் பாதிக்கும். அத்தோடு பறவைகள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும்’ என இன்ஸ்பெக்டரிடம் எடுத்துக் கூறினர்.

மேலும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரையில் தாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவதாக தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து பின்னர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

More
>