வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அசால்டாக திருடும் கொள்ளையர்கள்: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

பூந்தமல்லி: வீடுகளுக்குள் புகுந்து அசால்டாக திருடும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரிக்கின்றனர். பூந்தமல்லி ராஜா அக்ரஹார பகுதியில் உள்ள வீடுகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருமழிசை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வாலிபர்கள், பெண்கள் ஏராளமானோர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களது வீடுகளில் இருந்து செல்போன், லேப்டாப் ஆகியவை அடிக்கடி திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் சிவப்பு நிற சட்டை அணிந்து மோட்டார் சைக்கிளில் இரண்டு மர்ம நபர்கள் வருகின்றனர். அதில் ஒருவன் சாவகாசமாக இறங்கி அந்த வீட்டிற்கு பழக்கப்பட்ட ஒருவனைப்போல் கேட்டை திறந்து உள்ளே செல்கிறான். பின்னர் சிறிதுநேரத்தில் உள்ளே இருந்து செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சாவகாசமாக அந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச்செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

மேலும், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கும் நபர்களின் வீடுகளை நோட்டமிட்டு தொடர்ச்சியாக அந்த வீடுகளில் செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச்செல்வது தெரியவந்தது. புகாரின்படி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடுகின்றனர். வாலிபர்கள் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டை குறிவைத்து நடந்த இந்த சம்பவத்தில் 3 லேப்டாப்கள், 5 செல்போன்கள் திருடுபோயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: