திருவள்ளூரில் புதிதாக கட்டப்படும் அரசு மருத்துவக்கல்லூரியில் அமைச்சர்கள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் புட்லூர் ஊராட்சியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஆரம்ப துணை சுகாதாரத் நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 11 இடங்களில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக மெதுவாக நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு திருத்திய மதிப்பீடு என்றும், கூடுதல் மதிப்பீடு என்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த துறையின் சார்பில் நாங்கள் செல்கிற மாவட்டங்களில் எல்லாம் இந்த 11 மருத்துவ கல்லூரிகளை அடிக்கடி ஆய்வு செய்தோம். தற்போது பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. முதல்வர் ஏற்கனவே பிரதமரை சந்தித்து இந்த ஆண்டிலேயே 11 மருத்துவ கல்லூரிகளுக்கு தேவையான மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, இரண்டு முறை ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரை நாங்களும் நேரடியாக சந்தித்து, முதல்வரின் வேண்டுகோளை அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் தேசிய மருத்துவ ஆய்வுக் குழு வந்து, தமிழகத்தில் இருக்கிற 11 மருத்துவ கல்லூரிகளின் கட்டுமானப்பணிகளையும் ஆய்வு செய்திருக்கிறது. ஆய்வுக்கு பின்னர் விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கட்டப்பட்டு வருகிற கல்லூரி மருத்துவமனைகளுக்கு தலா 150 வீதம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது. நாமக்கல், திருப்பத்தூர், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த பணிகளில் சிறிய அளவில் குறிப்பாக இருக்கைகள், மேசை தளவாடங்கள், உபகரணங்கள் பெறப்படவில்லை என்ற காரணத்தினால் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு 150 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிலாக 100 என்ற வகையில் ஒப்புதல் அளித்தார்கள்.

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கூடுதல் கட்டுமான பணிகள் நிறைவு செய்திட வேண்டும் என்ற வகையில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைத்திருந்தார்கள். தற்போது திருவள்ளூர் தொடங்கி ராமநாதபுரம், திருப்பத்தூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் முழுமையாக கட்டிடப்பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு புட்லூருக்கு துணை சுகாதர நிலையம் ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது கே.ஜெயக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, திமுக மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மருத்துவக்கல்வி இயக்கக இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், பூச்சியியல் வல்லுநர் இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், பொதுப்பணித்துறை மருத்துவ கட்டிடம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் பா.செல்வராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: