அதிக பாரம் ஏற்றமாட்டோம்: லாரி உரிமையாளர்கள் உறுதிமொழி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர், கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது. கடந்த 5 ஆண்டுகளாக மணல் குவாரிகளை திறக்காததால், ஆண்டுதோறும்  அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தரமான மணல் இல்லாததால், கட்டிடங்கள் தரமானதாக இல்லை. மணல் சரிவர கிடைக்காததால், பில்டர்ஸ் முதல் கட்டிட தொழிலாளர்கள் வரை பெரும் நஷ்டத்தில் அவதிப்படுகின்றனர்.

அதனால், மணல் திருட்டு அதிகளவில் நடக்கிறது. மணல் சரிவர கிடைக்காத காரணத்தால், லாரியில் விதியை மீறி அளவுக்கு அதிகமாக, மணல் ஏற்றுகின்றனர். அந்த நேரத்தில், போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், லாரி உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கிறார்கள். எனவே நாங்கள், இனி லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதில்லை என உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். கடந்த 5 ஆண்டுகளாக பெய்த மழையாலும், ஆறுகளில் மணல் எடுக்காததாலும், ஆறுகளில் மணல் குவிந்துள்ளது.

ஆகையால், இவைகளையெல்லாம் தமிழக அரசு கருத்தில் கொண்டு மலேசிய மண் கிடைக்க நடவடிக்கை எடுத்தது போல், போர்க்கால அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து, தற்சமயம் 4 அல்லது 5 மணல் குவாரிகளை  திறக்க அனுமதிக்க வேண்டும்.  தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார். அப்போது, லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மாநில செய்தி தொடர்பாளர் கணேஷ் உள்பட முக்கிய நிர்வாகிகள் என பலர் இருந்தனர்.

Related Stories: