நீட் தேர்வு ஆய்வுக்குழு விவகாரம் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

புதுடெல்லி: நீட் தேர்வை ஆய்வு செய்யும் ஓய்வு நீதிபதி ஏ.கே.ராஜன் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சேர்க்கைகளில் நீட் ஏற்படுத்திய தாக்கத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமனம் செய்தது. இதையடுத்து அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜ தரப்பில் அதன் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்,’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து, மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்வு, ‘பொதுமக்கள் கருத்தை கேட்டு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா?, இல்லையா? என்ற உண்மையை அறிய தமிழக அரசு விரும்பினால், அதை தடுக்க அதிகாரம் இல்லை. மேலும் இந்த ஆய்வுக்குழு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிரானதும் கிடையாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அமைத்த நீட் ஆய்வுக்குழு செல்லும் என்பதால், நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவை கடந்த ஜூலை 13ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சென்னையை சேர்ந்த திரிஷா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நீட் தேர்வு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதேப்போன்று இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள ஓய்வு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: