பெகாசஸ் ஒட்டு கேட்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து முடித்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பான இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட  விவகாரம், நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விவசாரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை அமைக்கும்படி கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது.

இந்த ஒட்டு கேட்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒட்டு கேட்பு  தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு, விரிவாக விசாரணை நடத்தப்படும். அந்த குழுவில் இடம் பெறக்கூடிய சில நிபுணர்களிடம் பேசப்பட்டு வருகிறது. அதில், குழுவில் இடம் பெறுவதற்கு சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால், அவகாசம் தேவைப்படுகிறது. சுதந்திரமான நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக விரைவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்,’ என கடந்த மாதம் 23ம் தேதி தெரிவித்தது. அதன்படி, இந்த வழக்கில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.

Related Stories: