இந்தியாவில் அவதாரம் எடுத்துள்ள புதிய உருமாற்ற கொரோனா: அடுத்த பயங்கரமா ஏஒய் 4.2? வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பீதி

நியூகேசில்: இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியாவில் பரவியிருக்கும் ஏஒய் 4.2 எனும் புதிய வகை டெல்டா வைரஸ், கொரோனாவின் அடுத்த ஆதிக்கம் செலுத்தும் உருமாற்ற வரிசையா என மக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். உலகையே வாட்டி வதக்கிய கொரோனா வைரஸ் ஒருவழியாக ஓய்ந்து விட்டது என மக்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில், இங்கிலாந்தில் ஏஒய் 4.2 எனும் புதிய வகை டெல்டா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. தற்போது அதிகளவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க, ஏஒய் 4.2 வைரசே காரணம் என ஆய்வு முடிவுகள் கூறி உள்ளன. இதனால் டெல்டா வைரசை போல, அதிகளவில் மக்களை தொற்றும் அடுத்த ஆதிக்கம் செலுத்தும் உருமாற்ற வகை வைரசாக ஏஒய் 4.2 இருக்குமா? என மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் இந்த வகை வைரஸ் பரவி இருக்கிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 17 மாதிரிகள் ஏஒய் 4.2 வகை வைரஸ் பாதிப்புக்குள்ளானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, டெல்டாவின் மற்றொரு வீரியமிக்க ஏஒய்-4 வகை வைரசும் பரவத் தொடங்கியிருக்கிறது. எல்லாம் முடிந்து விட்டது என எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த புதிய பிறழ்வுகள் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டுமா என்பது குறித்து இங்கிலாந்து ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கொரோனாவின் மரபணு மாற்றங்கள் மற்றும் புதிய வகை வைரஸ்களை கண்காணிப்பதற்கான எடின்பர்க் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆய்வாளர்களை கொண்ட கூட்டுக் குழு கூறியதாவது: ஏஒய் 4.2 என்பது டெல்டா வைரசின் பரம்பரையாகும். தற்போது, இதே மரபணுவில் பல்வேறு உருமாற்றங்களுடன் 75 ஏஒய் பரம்பரை வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஏஒய் 4.2 வகை வைரஸ் இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 28 நாட்களில் 63% மாதிரிகளில் ஏஒய் 4.2 வரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசில் ஒய்145எச் மற்றும் ஏ222வி ஆகிய இரு மரபணு உருமாற்றங்கள் காணப்படுகின்றன.

இதில், ஒய்145எச் உருமாற்றம் நோய் எதிர்ப்பிலிருந்து தப்பித்து தாக்கக் கூடிய திறன் கொண்டது. ஆனாலும், ஏஒய் 4.2 வகை வைரஸ் இங்கிலாந்து தவிர ஜெர்மனி, அயர்லாந்து, டென்மார்க்கிலும் பரவி இருக்கிறது. அங்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இதன் பரவல் படிப்படியாக மட்டுமே இருப்பதால், இது டெல்டா வைரஸ் அளவுக்கு வீரியமிக்கதாக இருக்காது என நம்பலாம். எனவே, ஏஒய் 4.2 வகை வைரஸ் கொரோனாவின் அடுத்த பயங்கரமாக இருக்குமா என இப்போதே கணிக்க முடியாது. இதற்கு இன்னும் அதிகப்படியான ஆய்வுகள் தேவை. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

* பயப்படாதீங்க...

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் துறை தலைவர் பாண்டா கூறுகையில், ‘‘ஏஒய் 4.2 புதிய வகை டெல்டா வைரஸ் வேகமாக பரவக் கூடியதாக இருந்தாலும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியது அல்ல. வேகமாக பரவக்கூடிய அனைத்து வைரசும் வீரியமிக்கதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, நாம் பீதியை உருவாக்கக் கூடாது. விழிப்புணர்வை அதிகரிப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம். எதிலும் மனநிறைவை அடைய முடியாது,’’ என்றார்.

Related Stories: