அதிமுக அரசு உத்தரவால் தான் ஜெயலலிதா அறையில் சிசிடிவி கேமரா நீக்கப்பட்டது: உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தகவல்

புதுடெல்லி: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு தரப்பில் அமைக்கப்பட்டது. ஆனால் இதில் குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் மட்டும் தற்போது வரையில் நேரில் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து ஆணையத்திற்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மருத்துவமனை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது கடந்த முறை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, “இந்த வழக்கில் புதியதாக வாதங்களை முன்வைக்க ஒன்றும் கிடையாது. ஏனெனில் ஏற்கனவே அனைத்தும் முடிந்து விட்டது. மேலும் ஆணையத்தின் விசாரணையும் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னதாக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் நீக்க வேண்டும். இதில் வழக்கு விசாரணையை வேண்டுமென்றே மருத்துவமனை தரப்பில் தாமதப்படுத்தப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அப்துல்நசீர் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவமனை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதத்தில், “நாங்கள் ஆணையத்தை கலைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் அதில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது தான் எங்களது குற்றச்சாட்டு. அப்படி இருக்கும் பட்சத்தில் எவ்வாறு மருத்துவ ரீதியிலான விவரங்களை ஆணையத்தின் முன்னிலையில் தெரிவிக்க முடியும்.

இந்த விவகாரத்தில் ஆணையத்தின் ஒட்டு மொத்த அணுகுமுறைகளும் தவறாக உள்ளது. அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் இனி விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு செல்ல மாட்டோம். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கிறோம். மேலும் விசாரணை விவரங்களை வேண்டுமென்றே ஆணையம் ஊடங்களில் கசியவிட்டுள்ளது. இதில் சசிகலா எதிர்மனுதாரர் என்பதால், அவருக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை.

மேலும் ஊடகங்களில் சில தலைவர்கள் ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பான அவரின் உடல்நலம் குறித்து சந்தேகங்களை கிளப்பும் வகையில் பேசியிருந்தார்கள்.

இதில் ஜெயலலிதா எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தாலும், அப்போதைய அரசின் மருத்துவக் குழு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் மருத்துவர்கள் ஆகியோரின் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தார். அப்பல்லோ கொடுத்த சிகிச்சைகளுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கூட திருப்தி தெரிவித்திருந்தனர்.  இதில் இன்னும் ஆணையத்தின் செயல்பாடுகள் முடியவில்லை. சாட்சியங்கள் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இன்னும் சில தலைவர்கள் இந்த விவகாரத்தில் விசாரிக்கப்படவுள்ளது.

இதில் முக்கியமாக ஆறுமுகசாமி ஆணையத்தின் செயல்பாடு எங்கள் மருத்துவமனையின் நற்பெயர் சார்ந்த விஷியத்தை கலங்கம் ஏற்படுத்தி வருகிறது. அதனால் தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இந்த விவகாரத்தில் ஆணையத்தின் ஒருதலைபட்சம், நீதி  மற்றும் அதிகார வரம்பு மீறல் ஆகிய மூன்றையும் வைத்து தான் இதில் இருந்து விலக்கு கேட்கிறோம். இதில் பல அரசியல் தலைவர்கள் விசாரிக்கப்படாமல் இருக்கும்போது, எங்கள் மருத்துவர்களை மட்டும் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்தது என்பது கண்டிப்பாக ஒரு தலைபட்சமானது ஆகும். ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு ஊடகங்களில் எங்கள் மருத்துவமனை மீது பல விஷியங்கள் பேசி எழுதப்பட்டது. அது எல்லாம் எங்கள் நற்பெயருக்கு எதிராக இருந்தது. மக்கள் ஊடகங்களை தான் நம்புவார்கள்.

மேலும் இதில் முக்கியமாக ஜெயலலிதா மருத்துவ சிகிச்சையில் இருந்த போது சிசிடிவி கேமராக்கள் நீக்கப்பட்டது குறித்து சர்ச்சை கிளப்பட்டது. தற்போது வரையில் அது நீடித்து வருகிறது. அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கிறோம். இதில் அப்போது இருந்த அதிமுக அரசு தரப்பில் இருந்து சொன்னதால் தான் சிகிச்சை அறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை முழுவதுமாக அகற்றினோம். அதில் ஜெயலலிதாவுக்கு முழு சுதந்திரம் தேவைப்படுவதாக எங்களிடம் அப்போது அதிமுக அரசு வலியுறுத்தி இருந்தார்கள்.

மேலும் அவரை மருத்துவமனைக்கு அனுமதிக்க அழைத்து வரும்போது மயக்க நிலையில் இருந்தது மட்டுமில்லாமல், அடிப்பட்ட காயங்களுடன் தான் ஜெயலலிதா இருந்தார். இதுகுறித்து பலமுறை மருத்துவமனை தரப்பில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து இன்றும் ஜெயலலிதா மரனம் தொடர்பான விவகாரத்தில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளது. இதில் அப்பல்லோ மருத்துவமனை தகவல் அவரது மரணம் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>