பைக்கில் பின்னால் அமரும் 9 மாத குழந்தைக்கும் ஹெல்மெட் கட்டாயம்: 40 கிமீ.க்கு மேல் வேகம் கூடாது; ஒன்றிய அரசு புதிய உத்தரவு

புதுடெல்லி: இருசக்கர வாகனத்தின் பின்னால் அமரும் 9 மாதம் முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஒன்றிய அரசு புதிய விதிமுறையை கொண்டு வர உள்ளது. இரு சக்கர வாகன பயணத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்த ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளுடன் வரைவு அரசாணை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இதில், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது அதிகபட்சம் 40 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே போல், 9 மாதம் முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பின் சீட்டில் அமர வைத்து அழைத்துச் செல்லும் போது அவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தனியாக அழைத்துச் செல்பவர்கள், அவர்களையும் குழந்தையையும் இணைத்து கட்டும், பாதுகாப்பு பெல்ட்டை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: